திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாக திகழ்கிறது. என்னதான் வசதியானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடைபெறவில்லை என்றால் அவர்களுடைய வம்சம் விருத்தியாகாது. எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்தாலும் திருமணம் என்ற ஒன்று நடைபெற்ற உடன் பொறுப்பு வந்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும்.
அதனால் தான் பொறுப்பில்லாதவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் கூறினார்கள். அப்படிப்பட்ட திருமணம் சரியான வயதில் நடைபெற்றால் தான் அதற்கென்று மதிப்பு இருக்கும். அப்பொழுதுதான் அவர்களின் பிற்கால வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வயது நெருங்கியதும் இப்பொழுது வேண்டாம் என்று காலத்தை தள்ளிப்போட்டு பலருக்கு வெகு நாட்கள் ஆகியும் திருமணம் நடைபெறாத சூழ்நிலை உண்டாகிவிட்டது. அப்படி திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களும், திருமண தடையால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்களும் அவர்களுடைய குலதெய்வத்தை என்றைக்கு சென்று எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
திருமண தடை நீங்க தானம்
ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைக்கும் முதல் காரண கர்த்தாவாக திகழக்கூடியவர் குலதெய்வமே. அதேபோல் நமக்கு வரக்கூடிய தடைகளை தகர்த்தெறிந்து நம்மை பாதுகாக்கும் தெய்வமாகவும் நம்முடைய குலதெய்வம் தான் விளங்குகிறது. அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்தால் தான் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஒருவருக்கு திருமணத்தில் தடை ஏற்பட்டு இருக்கிறது அல்லது திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே செல்கிறது என்னும் பட்சத்தில் அவர்கள் கண்டிப்பான முறையில் முதலில் குலதெய்வத்தை தான் வழிபட வேண்டும். பிறகுதான் மற்ற பரிகாரங்களை செய்ய வேண்டும். குலதெய்வத்தை வழிபடாமல் மற்ற தெய்வங்களுக்கு பரிகாரம் செய்வதாலும் திருமணத்தில் தாமதம் ஏற்படத்தான் செய்யும்.
முதலில் குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு பிறகு ஜாதக ரீதியாக பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது குலதெய்வத்தின் அருளால் அந்த பரிகாரங்கள் வெற்றியடைந்து விரைவிலேயே திருமணம் நடைபெறும். சரி இப்பொழுது திருமணம் விரைவில் நடைபெறுவதற்கு குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.
யாருக்கு திருமண தடை ஏற்பட்டு இருக்கிறதோ அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் வளர்பிறை நாட்களில் வருவது போல் பார்த்துக் கொண்டு அன்றைய தினம் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது மாங்கல்ய செட்டு குறைந்தபட்சம் 11 ல் இருந்து அதிகபட்சம் தங்களால் இயன்ற அளவு வரை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். எப்பொழுதும் குலதெய்வ கோவிலில் எந்த முறையில் பூஜை செய்து வழிபாடு செய்வீர்களோ அதே முறையில் பூஜை செய்து வழிபாடு செய்து விட்டு அங்கு கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களிடம் இந்த திருமாங்கல்ய செட்டை தர வேண்டும்.
முதலில் தரக்கூடிய திருமாங்கல்ய செட்டை வயது முதிர்ந்த தம்பதிக்கு கொடுத்து அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். எவ்வளவு எடுத்துச் செல்கிறோமோ அதில் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் அங்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு கொடுத்துவிட்டு அந்த ஒன்றை திரும்பவும் வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை அறையிலேயே வைத்து விட வேண்டும்.
இந்த முறையில் தொடர்ந்து 16 பிறந்த நட்சத்திர நாட்களில் குலதெய்வத்தை இதே முறையில் வழிபட வேண்டும். 16வது பிறந்த நட்சத்திர நாள் அன்று தங்களால் இயன்ற பிரசாதத்தை வீட்டிலேயே செய்து எடுத்துக் கொண்டு போய் கோவிலில் வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: தடைகள் நீக்கும் அருகம்புல் பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளால் விரைவிலேயே திருமணம் கைகூடும்