ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவர் செய்கின்ற தொழிலில் முன்னேற்றம் இருக்க வேண்டும் அல்லது அவர் செய்கின்ற வேலையில் முன்னேற்றம் இருக்க வேண்டும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் தொழிலில் எந்தவித வளர்ச்சியும் இல்லை என்றாலோ வேலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றாலோ அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பின்தங்கியே இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்கள் காலபைரவரை எந்த நாளில் எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
தொழிலிலும் வேலையிலும் முன்னேற்றம் ஏற்பட
நம்முடைய வாழ்க்கையில் எதுவெல்லாம் நமக்கு தடைகளாக இருக்கிறதோ எதுவெல்லாம் நம்மை கஷ்டப்படுத்துகிறதோ அவை அனைத்தும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்றால் நாம் உக்கிர தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் சிவபெருமானின் மறு அவதாரமாக திகழக்கூடியவர் தான் கால பைரவர். கால பைரவரை அஷ்டமி தினத்தில் தான் பலரும் வழிபாடு செய்வார்கள். அதை தவிர்த்து ஒரு சில வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக சில கிழமைகளில் நாம் வழிபாடு செய்தோம் என்றால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.
செய்கின்ற தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கி தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும், லாபம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், செய்கின்ற வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், வேலையில் தொடர்ந்து நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய ராகு காலமான மாலை 4:30 மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்ய வேண்டும்.
அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்லுங்கள். அங்கு கண்டிப்பான முறையில் காலபைரவர் இருப்பார். அந்த காலபைரவருக்கு முந்திரி பருப்பால் மாலை தொடுத்து சாற்ற வேண்டும். பிறகு நாட்டு மருந்து கடையில் புனுகு விற்கும். அந்த புனுகையும் வாங்கிக் கொண்டு போய் காலபைரவருக்கு தர வேண்டும். பிறகு கால பைரவருக்கு முன்பாக இரண்டு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்ததாக தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து தாங்கள் செய்கின்ற தொழில் மற்றும் வேலையில் இருக்கும் தடைகளை விலக வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் கால பைரவரை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் தொழிலிலும் வேலையிலும் இருக்கும் தடைகள் நீங்குவதோடு நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும். தங்களுடைய வேண்டுதல் நிறைவேறிய பிறகு கால பைரவருக்கு வஸ்திரம் சாற்றுவது அபிஷேகத்திற்கான பொருட்களை வாங்கி தருவது போன்றவற்றை செய்யலாம். அதோடு சேர்த்து கால பைரவர் ஆலயத்திற்கு வருபவர்களுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் தொழிலிலும் வேலையிலும் பெற்ற வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இதையும் படிக்கலாமே: குருவருள் பரிபூரணமாக கிடைக்க
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடிய கால பைரவரை தொழிலிலும் வேலையிலும் இருக்கும் தடைகள் நீங்க வேண்டும் என்பதற்காகவும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் முழு மனதோடு இந்த முறையில் வழிபாடு செய்து பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.