இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகளாக இருந்தாலும் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பல இருக்கின்றன. உடன் இருப்பவர்களாலேயே பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் சென்று பார்த்தாலே இதுபோல பல விஷயங்களை நம்மால் கேள்விப்பட முடிகிறது. அவை அனைத்தையும் கேள்விப்படும்போது நம்முடைய பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற ஒரு வித பயம் பிள்ளைகளைப் பெற்ற அனைத்து பெற்றோர்களுக்குமே இருக்கும். வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அந்த பயம் வேண்டவே வேண்டாம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த மந்திரத்தை கூறி எப்படி வாராகி அம்மனை வழிபட்டால் பெற்ற பிள்ளைகளுக்கு வாராகி அம்மன் பாதுகாவலாக இருப்பாள் என்று தான் பார்க்கப் போகிறோம்.
பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க வழிபாடு
சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடியவள் வாராகி அம்மன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக வீற்றிருந்தவளும் வாராஹி அம்மன் தான் என்பதும் அறிந்த உண்மையே. ராஜராஜ சோழன் தன்னுடைய எதிரிகளை வெல்வதற்காக போருக்கு கிளம்பும் பொழுது வாராகி அம்மனை வழிபாடு செய்துவிட்டு தான் கிளம்புவார் என்று புராணங்கள் கூறுகின்றன. எதிரிகளை வீழ்த்துவதற்கு உதவி செய்யக்கூடிய அற்புதமான தெய்வம் ஆக திகழ்பவள் வாராகி அம்மன். அப்படிப்பட்ட வாராகி அம்மனை சில வழிமுறைகளில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய பிள்ளைகளுக்கும் அவள் பாதுகாவலாக வந்து இருப்பாள் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை பஞ்சமி நாள் வரும் அன்று ஆரம்பிப்பது என்பது மிகவும் நல்லது. இந்த மாதம் பஞ்சமி என்பது வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று இரவு இந்த வழிபாட்டை ஆரம்பிப்பது என்பது நல்ல பலனைத் தரும். தொடர்ச்சியாக 27 நாட்கள் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த 27 நாட்களும் அசைவம் சாப்பிடுவதை மட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக நம்முடைய வீட்டில் வாராஹி அம்மனின் படம் இருந்தால் அந்த படத்தையோ, சிலை இருந்தால் அந்த சிலையோ வைத்து வழிபாடு செய்யலாம். அப்படி படமோ சிலையோ இல்லை என்பவர்கள் சாதாரணமாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.
இந்த வழிபாட்டை மாலை 6:30 மணியிலிருந்து 11:55 மணிக்குள் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் முதல் நாள் செய்ய ஆரம்பிக்கிறோமோ அதே நேரத்தில் தான் தொடர்ச்சியாக 27 நாட்களும் செய்ய வேண்டும். இரவு நேரம் என்பதால் பலருக்கும் இந்த வழிபாடு செய்வதில் எந்தவித தடைகளும் இருக்காது என்றே கூறலாம். வீட்டு பூஜை அறையில் வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
இந்த தீபமானது வடக்கு திசை பார்த்தவாறு எரிய வேண்டும். அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். தொடர்ச்சியாக 27 நாட்களும் தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது பால், பானகம், கற்கண்டு, மாதுளம் பழம், கிழங்கு வகைகள் என்று வாராகி அம்மனுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி நெய்வேத்தியம் வைத்த பிறகு கீழ்வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கூற வேண்டும்.
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ
ஸ்தம்பே ஸ்தம்பிணி நமஹ
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் ஹூம்பட் ஸ்வாஹா
இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் விலக சங்கடஹர சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்
இந்த வழிபாட்டு முறையை வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்துக் கொண்டு கூறி வழிபாடு செய்பவர்களுடைய பிள்ளைகளுக்கு வாராகி அம்மனே பாதுகாவலாகவும், பாதுகாப்பு கவசமாகவும் திகழ்ந்து எந்தவித பிரச்சனைகளும் அவர்களை அணுகாமல் பார்த்துக் கொள்வாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.