சமையலறையில் மளிகை பொருட்களை கொட்டி வைத்திருக்கும் கண்ணாடி பாட்டில்களை சுத்தம் செய்வது அவ்வளவு எளிது அல்ல. சமையல் அறையில் வைத்திருக்கும் இந்த கண்ணாடி பாட்டில்கள் எண்ணெய் படிந்து கண்ணாடியின் நிறம் மங்கிப் போய் இருக்கும். கண்ணாடி பாட்டில்கள் பார்ப்பதற்கு அவ்வளவு பளபளப்பாக இருக்காது. கட்டாயமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது அந்த பாட்டில்களை சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து மளிகை ஜாமான்களை கொட்டி வைத்தால் தான் மளிகை பொருட்களும் வண்டு பூச்சி பிடிக்காமல் இருக்கும்.
சமையலறையில் இருக்கும் எண்ணெய் படிந்த பழைய கண்ணாடி பாட்டில்களை சுலபமாக சுத்தம் செய்ய ஒரு குறிப்பு, கண்ணாடி பாட்டிலில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர், ஸ்டிக்கரை நீக்கிய பின்பு அதில் மீதம் இருக்கும் பசையை முழுமையாக நீக்கவும் சுலபமான எளிமையான வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கண்ணாடி பாட்டிலை சுத்தம் செய்ய எளிய குறிப்பு:
ஒரு சிறிய பவுலில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அதில் பல் தேய்க்கும் பேஸ்ட் 1 ஸ்பூன், பேக்கிங் சோடா 2 ஸ்பூன், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகலமான அன்னக்கூடையிலோ அல்லது டப்பிலோ வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த லிக்விடை ஊற்றி, உங்கள் கையை கொண்டு நுரை வர நன்றாக கலந்து விட வேண்டும். நீங்கள் தேய்க்கப் போகும் பாத்திரங்கள் மூழ்கும் அளவுக்கு அந்த டப்பில் வெதுவெதுப்பான தண்ணீர் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தண்ணீரில் எடுத்து வைத்திருக்கும் கண்ணாடி பாட்டில்கள் எல்லாவற்றையும் மூழ்க வைத்து பத்து நிமிடம் வரை ஊற வைத்து பின்பு சாதாரண நாரை கொண்டு தேய்த்து கழுவினாலே போதும் கண்ணாடி பாத்திரங்கள் அனைத்தும் பளபளப்பாக மாறும். இதே தண்ணீரில் எண்ணெய் பிசுக்கு படிந்த எண்ணெய் பாட்டில், சில்வர் பாத்திரங்கள் என்று மற்ற பாத்திரங்களை போட்டு ஊறவைத்து தேய்த்தாலும் அது சுலபமாக பளபளப்பாக மாறிவிடும்.
பழைய பாட்டிலில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரை நீக்குவது எப்படி:
நம்முடைய வீட்டில் ஊறுகாய் பாட்டில், காபி தூள் வாங்கக்கூடிய பாட்டில் என்று நிறைய பாட்டல்களை வைத்திருப்போம். அதன் மேலே ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும். சில பாட்டில்களில் அந்த ஸ்டிக்கரை எடுப்பது சுலபம். சில பாட்டில்களில் ஸ்டிக்கரை சுலபமாக எடுக்க முடியாது அல்லவா. அதற்கு என்ன செய்வது. ஒரு அகலமான பாத்திரத்தில் கை பொறுக்கும் சூடு தண்ணீரை ஊற்றி அதில் இப்படி ஸ்டிக்கர் எடுக்க முடியாத பாட்டில்களை போட்டு ஊற வைக்க வேண்டும். மூடியை கழட்டி விட்டு பாட்டிலை தண்ணீரில் மூழ்க வைத்து ஊற வையுங்கள். 1 மணி நேரத்தில் இருந்து, 2 மணி நேரம் ஊறிய பின்பு அந்த ஸ்டிக்கரை எடுத்தால் ஸ்டிக்கர் முழுமையாக நீங்கி வந்துவிடும்.
இதையும் படிக்கலாமே: பாத்ரூம் கிளீன் பண்றதுக்கு கஷ்டமாக இருக்கா? இது தெரிஞ்சா இனி இப்படித்தான் உங்க பாத்ரூமையும் கிளீன் பண்ணுவீங்க!
ஸ்டிக்கர் எடுத்த இடத்தில் பிசுபிசுவென பசை ஒட்டும். என்ன செய்வது. பாட்டிலை ஈரத்திலிருந்து எடுத்து நன்றாக கழுவி விட்டு காய வைத்து விடுங்கள். ஒரு சிறிய துணியில் தேங்காய் எண்ணெயை தொட்டு அந்த பிசுபிசுப்பு உள்ள இடத்தை துடைத்து, எடுத்தால் பசை(கம்) மொத்தமும் நீங்கிவிடும். மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். பொங்கலுக்கு எல்லா பொருட்களையும் சுத்தம் செய்வீர்கள் அல்லவா அப்போது இந்த குறிப்பு உங்களுக்கு தேவைப்படும்.