அட! கோதுமை ரவையில் இவ்வளவு சுலபமாக அடை செய்து விடலாமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய் விட்டதே!

adai1
- Advertisement -

நிறைய பேர் அடையை அரிசியில் தான் செய்வார்கள். கோதுமை ரவை என்று சொல்லப்படும் சம்பா ரவையை பயன்படுத்தி அருமையான சுலபமான ஆரோக்கியமான ஒரு அடையை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக குறைந்த பொருட்களை வைத்து சுலபமான முறையில் செய்யக்கூடிய இந்த அடைக்கு தேங்காய் சட்னி இருந்தாலே போதும். 10 அடை கூட பத்தாது. மீண்டும் மீண்டும் ருசிக்க தோன்றும் சுவையில் கோதுமை அடை எப்படி செய்வது. தெரிஞ்சுக்கலாம் வாங்க.

adai2

இந்த அடை செய்ய கோதுமை ரவை – 1 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், துவரம்பருப்பு – 1/4 கப், வரமிளகாய் – 5, சின்ன வெங்காயம் தோலுரித்து 5 லிருந்து 6, சோம்பு – 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்தப் பொருட்கள் மட்டுமே போதும்.

- Advertisement -

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவையை தனியாக போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். கோதுமை ரவை 1/2 மணி நேரம் ஊறினால் போதும். மற்றொரு பாத்திரத்தில் துவரம் பருப்பையும், கடலை பருப்பையும், வரமிளகாய் இந்த 3 பொருட்களை போட்டு 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

adai3

இந்தப் பொருட்கள் எல்லாம் ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மிக்சி ஜாரில் முதலில் கோதுமை ரவையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டாவதாக மிக்ஸி ஜாரில் ஊற வைத்திருக்கும் பருப்பு வகைகளையும் மிளகாயையும் சேர்த்து இதனுடன் சோம்பு 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, தோல் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம் இவைகளையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்த பருப்பு வகைகளை, அரைத்து வைத்திருக்கும் சம்பா ரவையோடு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் ஊற்ற வேண்டும். இந்த அடை மாவு இட்லி மாவு பதத்திற்கு கெட்டிப் பதத்தில் இருக்க வேண்டும். அடை ஊற்றுவதற்கு தயாராக இருக்கும் மாவில் தேவைப்பட்டால் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை சேர்த்து சுடலாம். முருங்கைக்கீரை இல்லாதவர்கள் கொத்தமல்லித்தழையை பொடியாக வெட்டி போட்டு அடை வார்க்கலாம்.

adai

சூடான தோசைக்கல்லில் அடை மாவை ஒரு குழி கரண்டி அளவு எடுத்து ஊற்றி, இலேசாக குழிகரண்டிலேயே பரப்பிவிட வேண்டும். முடிந்தால் உங்களுடைய கையை ஈரத்தில் தொட்டு அந்த அடையை தோசைக்கல்லில் கொஞ்சம் மெல்லிசா தட்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான அடை தயார். தேங்காய் சட்னி காரச் சட்னி அல்லது தக்காளி சட்னி இவைகளை வைத்து பரிமாறி பாருங்கள். நிறைவான உணவு கிடைத்த திருப்தியை உணர்வீர்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -