பாயசத்தில் பால் பாயசம், பாசிப்பருப்பு பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயசம் என்று பல வகைகள் உள்ளன. ஆனால் நாம் இந்த பதிவில் கோதுமையை வைத்து கோதுமை பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். மிகவும் சுவையான கோதுமை பாயசம் புது வகையாகவும் குழந்தைகள் விரும்பும் வகையிலும் இருக்கும் என்பதால், அனைவரும் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – இரண்டு கப், வெல்லம் – 1/4 கிலோ, தேங்காய் – 1, நெய் – மூன்று டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 5, முந்திரி பருப்பு – 10, உலர்ந்த திராட்சை – 10, உப்பு – 1 சிட்டிகை, பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை, தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்து, வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் விட்டு கோதுமை ரவையை அதில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கோதுமை ரவை இல்லாதவர்கள் முழு கோதுமையை எடுத்து, கழுவி, காய வைத்து, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு அதை கோதுமை ரவையாக உபயோகப்படுத்தலாம்.
கோதுமை ரவை நன்றாக வறுபட்ட உடன் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, கோதுமை ரவை நன்றாக குலையும் அளவு வேகவிட வேண்டும். பிறகு வெல்லத்தை உடைத்து அதில் சிறிது நீரூற்றி அந்த வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து, வெல்லம் முழுமையாக கரைந்த பிறகு அதை ஒரு தனி பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கோதுமை ரவை நன்றாக வெந்த பிறகு அதில் கரைத்து வைத்திருக்கும் வெல்ல நீரை ஊற்ற வேண்டும்.
அடுத்து தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு சிறிது நீரூற்றி நைசாக அரைத்து, தேங்காய் பாலை எடுக்க வேண்டும். முதல் தேங்காய் பாலை எடுத்த பிறகு, மறுபடியும் தேங்காய் சக்கையை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டாவது தேங்காய் பாலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெல்லம் சேர்த்த கோதுமை ரவையில் இரண்டாவது தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். அது நன்றாக கொதித்த பிறகு கடைசியாக, கெட்டியாக இருக்கும் முதல் தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: பேபி கான் பஜ்ஜி செய்ஞ்சு சாப்ட்டு இருக்கீங்களா? இல்லைன்னா உடனே இப்படி மொறு மொறுன்னு செய்ஞ்சு சாப்பிடுங்க. இதுல பஜ்ஜி செஞ்சா இவ்வளவு டேஸ்டா இருக்குமான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க.
ஒரு வாணலியை எடுத்து அதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி, நெய் சூடானதும் முந்திரி, திராட்சை போன்றவற்றை போட்டு, அவற்றை பொன்னிறமாக வறுக்க வேண்டும். வருத்த முந்திரி, திராட்சையை அந்த நெய்யுடன் பாயசத்தில் கொட்ட வேண்டும். பிறகு ஏலக்காயை தட்டி அதில் சேர்க்க வேண்டும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் அதில் சேர்க்க வேண்டும். இப்பொழுது சுவையான, அருமையான, சத்தான கோதுமை பாயாசம் தயார். வித்தியாசமாக வீட்டில் செய்து உங்கள் குடும்பத்தினருக்கு பரிமாறுங்கள்.