கேரளா ஸ்டைல் ‘பட்டாணி முட்டை மசாலா!’ 1 கப் பட்டாணியும், 4 முட்டையும் இருந்தா போதும் பத்தே நிமிடத்தில் புதிய பிரேக்ஃபாஸ்ட் ரெடி!

Green-peas-egg-masala2

கேரளாவில் பிரசித்தி பெற்ற இந்த உணவு வகை தட்டு கடைகளில் கிடைக்கும் மிகவும் சுவையானதொரு ரெசிபி! செய்வதற்கும் மிகவும் எளிமையானது, பட்டாணி மற்றும் முட்டை சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி பல வகைகளில் நாம் சாப்பிட முடியும். காலை உணவுக்கு பதிலாக புதிதாக செய்து சாப்பிடலாம் அல்லது சப்பாத்திக்குள் வைத்து ரோல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் அல்லது மாலை வேளைகளில் டீயுடன் வைத்தும் பரிமாறலாம். இப்படி பல வகைகளில் சாப்பிடக்கூடிய இந்த ரெசிபி ஆரோக்கியமானதும் கூட.. சரி, அதை எப்படி செய்வது? என்று இனி வரும் பத்திகளில் காண்போம் வாருங்கள்!

green-peas-and-egg

‘பட்டாணி முட்டை மசாலா’ செய்ய தேவையான பொருட்கள்:
பட்டாணி – ஒரு கப்
தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2
முட்டை – 4

பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
மிளகு தூள் – அரை டீஸ்பூன்

ginger 3-compressed

துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன்
பொடி பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித் தழை – தேவையான அளவிற்கு
உப்பு – தேவையான அளவிற்கு

- Advertisement -

‘பட்டாணி முட்டை மசாலா’ செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் பட்டாணியை முந்தைய நாள் இரவே நன்கு அலசி சுத்தமான தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து குக்கரில் பட்டாணியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மூடி 3 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும். பட்டாணி அதிகம் குழைந்து விடக்கூடாது. நன்கு வெந்தபின் பட்டாணியை வடித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

pattani-onion-fry

ஒரு வாணலியில் தேவையான அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். கேரளா ஸ்டைல் என்பதால் தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்யும் பொழுது அதன் சுவை அலாதியாக இருக்கும். தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் சாதாரண எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். அதில் துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் அதனுடன் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும், இதில் தக்காளி சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய்கள் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த பட்டாணிகளை சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து பட்டாணியுடன் சேர்ந்து பச்சை வாசம் போக 5 நிமிடம் நன்கு வதக்கவும். பின்னர் உடைத்து வைத்துள்ள 4 முட்டையையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். முட்டை உதிரி உதிரியாக வரும் வரை பட்டாணியுடன் சேர்த்து வதக்க வேண்டும். அனைத்தும் ஒன்றோடொன்று கலந்து திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி பரிமாற வேண்டியது தான். சுட சுட சாப்பிடும் போது சுவையும் நன்றாக இருக்கும். இந்த முறையில் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருப்பவர்களை நீங்களும் அசத்து விடுங்கள்.