5 நிமிடத்தில் குஜராத்தி ஸ்டைலில் ஒரு மசாலா பூரி இப்படி செய்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்களேன். குஜராத்துக்கே போய் பூரி சாப்பிட்டது போல இருக்கும்.

masala-poori
- Advertisement -

எப்போதும் போல பூரி சுட்டு சாப்பிட்டு போர் அடிக்குதா. ஒரு நாள் குஜராத்தி ஸ்டைலில் இந்த மசாலா பூரி சுட்டு சாப்பிட்டு பாருங்கள். இது சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள கூட எதுவுமே தேவையில்லை என்றால் பாருங்க. இவ்வளவு அருமையான சுவை நிறைந்த பூரியை நீங்க எங்கேயுமே சுவைத்திருக்க மாட்டீங்க. உங்களுடைய வீட்டிலேயே சுலபமாக சூப்பர் குஜராத்தி ஸ்டைலில் பூரி செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.

முதலில் 2 பச்சை மிளகாய், 1 இன்ச் தோல் சீவிய இஞ்சியை எடுத்து சிறிய உரலில் போட்டு நன்றாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து இடித்த விழுது நமக்கு தேவைப்படும். சில்லி ஃபிளக்ஸ் இருந்தால் அதை இந்த ரெசிபிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை என்றால் இரண்டு வரமிளகாய்களை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்தும் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 2 கப், ரவை – 1/2 கப், கடலை மாவு – 1/2 கப், இஞ்சி பச்சை மிளகாய் இடித்த விழுது – 1 டேபிள் ஸ்பூன், சில்லி ஃப்ளெக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன், சீரகப்பொடி – 1/2 ஸ்பூன், தனியா பொடி – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், ஓமம் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, கஸ்தூரி மேத்தி – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் உங்கள் கையை கொண்டு நன்றாக கலந்து விடுங்கள்.

அதன் பின்பு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தண்ணீர் தெளித்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 5 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். இதற்குள் கடாயில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து சூடு செய்யுங்கள். தயாராக இருக்கும் மாவில் பூரி தேய்க்க வேண்டும்.  மாவை ஒரு முறை பிசைந்து விட்டு, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சின்ன சின்ன மாவு உருண்டையில் கோதுமை மாவு தொட்டு சப்பாத்தி கட்டையில் வைத்து கொஞ்சம் திக்காக தேய்த்துக் கொள்ளுங்கள். தேய்த்த பூரியை சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தால் புசுபுசுவென பொங்கி வரும். சூப்பரான இந்த பூரியை சுடச்சுட அப்படியே சாப்பிட்டு பாருங்கள். இதன் ருசிக்கு நிச்சயம் வீட்டில் இருப்பவர்கள் மயங்கி போவார்கள். உங்களுக்கு இந்த பூரி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் கூட விருப்பமாக சாப்பிடுவார்கள்.

பின்குறிப்பு: பூரியை தேய்க்கும் போது கொஞ்சம் மெலிசாக தேய்த்து விட்டால் பூரி உப்பலாக வராது. தண்ணீர் ஊற்றி பிசையும் போது ஜாக்கிரதையாக பிசைய வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றி விடாதீர்கள். அதற்காக ரொம்பவும் தண்ணீர் குறைவாக ஊற்றி கல்லு போலவும் மாவு இருக்கக் கூடாது. மாவு பிசையும் போது சாஃப்ட்டாக பிசைய வேண்டும். அப்போதுதான் பூரியின் பக்குவம் சரியாக கிடைக்கும்.

- Advertisement -