குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 மிதுனம்

guru-peyarchi midhunam

மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!

உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணியஸ்தானமாகிய 5-ம் வீட்டில் 2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் அமர இருக்கிறார். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார்கள். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும் மீண்டும் வந்து பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

midhunam

குருபகவானின் பார்வை:

குருபகவான் 5-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். நல்ல வேலை அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

குருபகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் உங்கள் லாப வீடான 11-ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ், கௌரவம் உயரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சொந்த வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்வீர்கள். ஷேர் மூலம் லாபம் வரும்.

- Advertisement -

குருபகவான் தன் 9-ம் பார்வையால் ராசியைப் பார்ப்பதால், எவரையும் வசீகரிப்பீர்கள். உடல்நலம் சீராகும். உறவினர், நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு 6 மற்றும் 11-ம் வீட்டுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இருந்தாலும் அஞ்சவேண்டாம். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், வீண் டென்ஷன், உடல் அசதி, சோர்வு வந்து செல்லும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். உறவினர்களுடன் அளவோடு பழகவும்.

உங்களின் ராசிக்கு 7 மற்றும் 10-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

guru

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக குரு சென்று மறைவதால், உடல் ஆரோக்கியம் பற்றிய வீண் கவலை வந்து செல்லும். கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். அரசாங்கக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். சின்னச் சின்ன கௌரவப் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பணவரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

வியாபாரத்தில் நஷ்டங்களைச் சரிசெய்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களும் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.நீண்ட காலமாக வசூலாகாமல் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்கள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

guru

உத்தியோகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகும். சில புதிய வாய்ப்புகள் வரும். பதவி உயர்வு உண்டு. சம்பள பாக்கி கைக்கு வரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

மாணவ -மாணவிகளே! கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.

இந்த குரு பெயர்ச்சி விரக்தியின் விளம்பிலிருந்த உங்களுக்கு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்து சாதனையாளராக மாற்றும்.

பரிகாரம்: பரிகாரம்: பூரம் நட்சத்திரத்தில், மதுரை மாவட்டம் திடியன் மலை எனும் ஊரில் அருளும் ஸ்ரீகயிலாசநாதரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள்; நினைத்தது நிறைவேறும்.