குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 சிம்மம்

guru-peyarchi simmam

தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்டவர்களே

குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்துகொண்டு பலன் தர இருக்கிறார். இக்காலக் கட்டத்தில் சகிப்புத் தன்மை மிகவும் அவசியம்.பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் ஏற்படுவதால் பணப் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். முக்கியமான விஷயங்களில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம். முக்கிய அலுவல்களை நீங்களே செய்வதுதான் நல்லது.

simmam

குருபகவானின் பார்வை:

குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்பு நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புது வேலை அமையும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

குருபகவான் தன் 7-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சிந்தித்து சாதிப்பீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்களைத் தீர்க்க புது வழி ஒன்றை யோசிப்பீர்கள்.

- Advertisement -

குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு 4 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் செல்வதால், காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். வீட்டில் கூடுதலாக அறை அல்லது தளம் அமைக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீர்படும்.

06.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். பிற மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

உங்கள் ராசிக்கு 5 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய குருபகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால், பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குருபகவான் அதிசார வக்கிரமாகச் செல்வதால், சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். அடிக்கடி தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும்.

guru

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், வேலைச்சுமையால் உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும். மற்றவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாதீர்கள். காய்ச்சல், யூரினரி இன்ஃபெக்‌ஷன் வந்து செல்லும். ஆனால், பணப் புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். யாருக்கும் முன்பணம் தரவேண்டாம். விளம்பரம் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பண விவகாரத்தை நீங்களே கவனிப்பது நல்லது. ஏற்றுமதி – இறக்குமதி, எலெக்ட்ரானிக்ஸ், பெட்ரோகெமிக்கல், பரிசுப்பொருட்கள் விற்பனை போன்றவற்றால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் உங்கள் கடமைகளை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேலை விஷயமாக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய வாய்ப்புகளை யோசித்தே ஏற்றுக்கொள்ளவும்.

guru

மாணவ மாணவிகளே! தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள்.கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங்களும் வதந்திகளும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனாலும், கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பட்டிதொட்டி எங்கும் பேசப்படும்.

மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களை சிலநேரம் தவிக்க வைத்தாலும், அனுபவ அறிவாலும், கடின உழைப்பாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: சித்திரை நட்சத்திர நாளில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் தலத்துக்குச் சென்று ஸ்ரீசுந்தரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும் வழிபடுங்கள்; துன்பங்கள் தீரும்.