குறைவில்லாத செல்வம், கடன் இல்லாத வாழ்க்கை, மன நிம்மதியான சந்தோஷம், இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். ஆனால், இன்றைய சூழ்நிலையில், ஒரு மனிதன் வாழ்க்கையில், மன நிம்மதி இல்லை, கையில் பணம் இல்லை, தகுதிக்கு மீறி கடன் வாங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான். இதுதான் வாழ்க்கையாக மாறிவிட்டது.
இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் ஒரு சில சூட்சும பரிகாரங்களை நாம் செய்ய வேண்டும். அந்த வகையில் உங்கள் பண கஷ்டம் தீருவதற்கு நாளை ஒரு அற்புதமான நாள் வந்திருக்கிறது. நாளைய தினத்திற்கு அப்படி என்ன சிறப்பு. நாளை ‘குரு புஷ்ய யோகம்’ என்று சொல்கிறார்கள்.
அப்படி என்றால் என்ன. வியாழக்கிழமையும், பூசம் நட்சத்திரமும் சேர்ந்து வந்தால் அந்த நாளை குருபுஷ்ய யோகம் என்று சொல்லுவார்கள். இப்படி ஒரு நாள் வருவது அரிது. வருடத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ தான் இப்படிப்பட்ட சேர்கை இருக்கும். குரு பகவானின் அருளும், குபேரரின் அருளும் ஒருசேர கிடைக்க இந்த நாளில் நாம் வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான ஒரு பூஜையை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
வியாழக்கிழமை குபேர நேரம் என்பது மாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை இருக்கிறது. வியாழக்கிழமை குரு ஹோரை, என்பது இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை இருக்கிறது. ஆக நாளை நாம் வழிபாடு செய்வதற்கு உகந்த நேரம் இதுதான்.
குபேரர் வழிபாடு
உங்கள் வீட்டில் குபேரர் சிலை அல்லது திருவுருவப்படம் இருந்தால் அந்த குபேரருக்கு வியாழக்கிழமை தோறும் வழக்கமாக எப்படி வழிபாடு செய்வீர்கள். குபேரர் விளக்கு ஏற்றி, குபேரருக்கு அர்ச்சனை செய்து, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை மேற்கொள்வீர்கள் அல்லவா. அதேபோல வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நாளைய தினம் குபேரருக்கு பிடித்தமான நாணய சத்தங்களை எழுப்பி குபேரருக்கு அர்ச்சனை செய்வது சிறப்பான பலனை தரும்.
உங்களால் முடிந்த சில்லரை நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சில்லறை நாணயங்களை குபேரரது பாதத்தில் போட்டு ‘ஓம் குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து அர்ச்சனை செய்த நாணயத்தை முடிச்சாக பச்சை துணியில் கட்டி பீரோவில் வைக்க, உங்களுடைய பணக்கஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை. இந்த குபேரர் வழிபாட்டை நாளை மாலை 8 மணிக்கு முன்பாக முடித்துக் கொள்ளுங்கள். மாலை 8:00 மணிக்கு பிறகு வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம், குரு ஹோரை இருக்கும்போது, குருபகவானையும் வழிபாடு செய்ய வேண்டும்.
குரு மந்திரம்
‘ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குருவே நமஹ!’ நாளை இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் குரு பகவானை மனதில் நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லும்போது குருபகவானின் அருளும் நாளைய தினம் உங்களுக்கு ஒரு சேர கிடைக்கும். உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும், பண கஷ்டம் தீர வேண்டும் என்று மேலே சொன்ன வழிபாட்டு முறைகளை நம்பிக்கையோடு செய்யும் போது பலன் பல நூறு மடங்கு அதிகமாக கிடைக்கும்.
நாளை தங்கம் வெள்ளி போன்ற ஏதாவது பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், நாளைய தினம் வாங்கலாம். வீட்டிற்கு தேவையான உபயோகமான பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் நாளை வாங்கலாம். சொத்து வாங்க வேண்டிய முயற்சிகளில் ஈடுபடலாம். நாளை வாங்கும் பொருட்களால் உங்களுக்கு பல மடங்கு லாபம் பெருகும். நாளைய நாளுக்கு அத்தனை சக்தி இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: தீராத துன்பம் தீர படிக்க வேண்டிய பாசுரம்
தவிர விடாதீர்கள். எந்த பூஜையையும் எங்களால் செய்ய முடியவில்லை என்றாலும் சரி, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வெறும் மந்திர ஜெபத்தை மட்டும் ஆவது நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் கஷ்டங்கள் தீருவதற்கு உண்டான காலமும் நேரமும் கைகூடிவரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.