உங்களுடைய கேஸ் ஸ்டவ்வில் ஒரு பர்னரில் மட்டும் வேகமாக நெருப்பு எரிய வில்லையா? 10 பைசா செலவில்லாமல் வீட்டிலேயே சரி செய்வது எப்படி?

gas-burner2
- Advertisement -

கியாஸ் அடுப்பு நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடிய ஒரு சமையலறை பொருளாகும். மிகவும் நேர்த்தியாக இருக்கக்கூடிய இந்த கியாஸ் அடுப்பில் சிறுதுளை வழியாகத்தான் கியாஸ் நமக்கு வந்து கொண்டிருக்கும். இப்படி இருக்க நாம் சமைக்கும் பொழுது சிந்தும் பொருட்களினால் ஏற்படக்கூடிய அடைப்பு சிறுக சிறுக சேர்ந்து நாளடைவில் அதன் எரியும் தன்மையை குறைத்துவிடும். இதனால் தீ ஜுவாலையானது மிகவும் குறைவாக எரிய ஆரம்பிக்கும். மேலும் நாம் சமைக்கவும் அதிக நேரம் எடுக்கும். இதனை காசு கொடுத்து கடையில் ரிப்பேர் செய்வதை விட, நம் வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி சரி செய்வது? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கேஸ் அடுப்பை பயன்படுத்துபவர்கள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். பாலை வைத்துவிட்டு எங்காவது சென்று விட்டால் பால் முழுவதும் சிந்தி கஸ் பர்னருக்குள் போய் நின்று கொள்ளும். அது அப்படியே காய்ந்து இறுகி விடும். ஒரு முறை, இரண்டு முறை சிந்துவதன் மூலம் இப்படி ஏற்படுவது இல்லை. வருடக்கணக்கில் இப்படி நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒரு நாள் அடைத்துக் கொள்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

குறிப்பாக சாதம் வடித்த தண்ணீர் சிந்துவது, குழம்பு பொருட்கள் சிந்துவது போன்றவை அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே கியாஸ் பர்னருக்குள் சிந்தாத படி நீங்கள் கவனமாக சமைப்பது அவசியமாகும். இப்படி சிந்திய பொருட்கள் நாளடைவில் கேஸ் வரக்கூடிய முதன்மையான இடத்தில் இருக்கும் சிறு துளைக்குள் சென்று அடைத்துக் கொண்டால், அதை அவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற முடியாது. இதனால் அந்த பர்னருக்குள் அதிக கியாஸ் பயணம் செய்யாது. குறைந்த அளவிலான கேஸ் பயணம் செய்வதால் தீ ஜுவாலை குறைந்து எரிய ஆரம்பிக்கும். இதனால் சமையலும் வேகமாக முடிவதில்லை.

இப்படி குறைந்த தீயில் உங்கள் பர்னர் அதிக நாட்கள் எரிந்து கொண்டிருந்தால் அதை எப்படி சரி செய்வது தெரியுமா? இந்த குறிப்பு முதல் கட்ட நடவடிக்கையை குறிக்கிறது. இப்படி செய்தும் உங்களுக்கு வேகமாக தீச்சுவாலை எரியவில்லை என்றால் கண்டிப்பாக கியாஸ் ரிப்பேர் செய்யும் கடையில் கொடுத்து தான் நீங்கள் ரிப்பேர் செய்ய வேண்டும். கேஸ் அடுப்பின் மீது இருக்கும் ஸ்டாண்ட் மற்றும் சிறு சிறு தட்டுகளை எடுத்து முதலில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சிலிண்டரின் ரெகுலேட்டரில் இருக்கும் சுவிட்சை ஆஃப் செய்யுங்கள். ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் அடுப்பை ஒருபோதும் திருப்பக் கூடாது. அடுப்பை திருப்பும் பொழுது டியூபில் எந்த விதமான இடையூறுகளும் இல்லாமல் பார்த்து பத்திரமாக திருப்புங்கள்.

- Advertisement -

கீழே கொடுத்துள்ள படத்தில் இருக்கும் இடத்தில் ஒரு சிறு துளை இருக்கும். இந்த துளை வழியாகத் தான் கியாஸ் பயணம் செய்து பர்னருக்கு வாயுவை அனுப்புகிறது. மெல்லிய துளையாக இருக்கும் இதில் ரொம்பவும் மெல்லிய ஊசி மட்டுமே செல்லக்கூடிய அமைப்பு இருக்கும். நூலிழையில் இருக்கக்கூடிய இந்த துளைக்குள் அடைப்புகள் இருப்பதால் தான் உங்களுடைய கியாஸ் இப்படி எரிகிறது. இதில் ஊசி செல்ல முடிந்தால் ஊசியை நுழைத்து சுத்தம் செய்து கொள்ளலாம். அவ்வளவு மெல்லிய ஊசி உங்களிடம் இல்லை என்றால், பிளாஸ்டிக் துடைத்தில் இருக்கும் ஒரு சிறு குச்சி அல்லது தேங்காய் நார் போன்றவற்றை கொண்டு துளைக்குள் நுழைத்து அடைப்பை சுத்தம் செய்து கொள்ளலாம்.

பிறகு மெல்லிய ஸ்ட்ரா வடிவிலான ஏதாவது ஒரு பொருளை அந்த துளையின் மீது வைத்து வேகமாக ஊதுங்கள். அல்லது நீங்கள் சைக்கிள் டயரில் காற்று அடிக்க வைத்திருக்கும் பம்ப் வைத்து இருந்தால் அதைப் பயன்படுத்தியும் நான்கைந்து முறை வேகமாக காற்றை உள்ளே செலுத்தி சுத்தம் செய்து கொள்ளலாம். சிலமுறை இவ்வாறு சுத்தம் செய்த பிறகு மீண்டும் கேஸ் இணைப்பை சரியாக மாட்டிவிட்டு மெதுவாக முன் பக்கம் திருப்பி ஸ்விட்ச் ஆன் செய்யுங்கள். கண்டிப்பாக உங்களுடைய அடுப்பு இப்போது நன்கு முழுமையாக எரிய ஆரம்பிக்கும்.

- Advertisement -