சத்தான சுவையுள்ள கருவேப்பிலை துவையல் 5 நிமிடத்தில் இப்படி செய்தால் சலிக்காமல் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமே!

karuveppilai
- Advertisement -

சத்துள்ள கறிவேப்பிலை துவையல் இந்த மாதிரி செய்து கொடுத்தால் இட்லி, தோசை, சாதம் என்று அனைத்து வகையறாக்களுக்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். கருவேப்பிலையை பெரும்பாலும் சமையலில் அனைவரும் ஒதுக்கி வைப்பது தான் வழக்கம். அதனால் அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் முழுமையாக நம்மை சேருவது இல்லை. பாரம்பரிய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த கருவேப்பிலை கூந்தல் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் வழு சேர்க்கக் கூடியது எனவே இதை துவையல், சட்னி போல அரைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. சுவையான சத்துள்ள கறிவேப்பிலைத் துவையல் எளிதாக எப்படி வீட்டிலேயே ஐந்து நிமிடத்தில் அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

கருவேப்பிலை துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மிளகு – 10, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, வர மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

கருவேப்பிலை துவையல் செய்முறை விளக்கம்:
ஒரு கைப்பிடி நல்ல ஃப்ரஷ்ஷான பச்சையாக இருக்கும் கருவேப்பிலையை எடுத்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளை உளுந்துக்கு பதிலாக கறுப்பு உளுந்து சேர்த்தாலும் கறிவேப்பிலைத் துவையல் ரொம்பவே சுவையாக இருக்கும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் சீரகம் மற்றும் 10 மிளகைச் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். இவை பொன்னிறமாக வரும் பொழுது இரண்டு வர மிளகாய்களை சேர்த்து லேசாக வதக்குங்கள். பின்னர் நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். சிறு நெல்லிக்காய் அளவு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். கருவேப்பிலை நன்கு சுருள வதங்கியதும் கடைசியாக துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

தேங்காய் துருவலை சேர்த்து அதிக நேரம் வதக்கக் கூடாது லேசாக 2 நிமிடம் வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய பொருட்களை சேர்த்து கறிவேப்பிலை துவையல் கெட்டியாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறு தாளிப்பு கொடுத்து கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து கொள்ளுங்கள். அதில் மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து அடுப்பை அணைத்து கொள்ளுங்கள். துவையலுடன் தாளிப்பை சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து வைத்துக் கொண்டால் போதும். ரொம்பவே சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்துள்ள கருவேப்பிலை துவையல் ஐந்து நிமிடத்தில் தயார்! சத்துள்ள இந்த கறிவேப்பிலைத் துவையலை இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -