கரம் மசாலா தூள். பெரும்பாலும் இதை நாம் கடைகளில் வாங்கி தான் இன்று பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் நம்முடைய வீட்டிலேயே மிகக் குறைந்த அளவில் மிக்ஸி ஜாரிலேயே கரம் மசாலாத்தூளை வறுத்து அரைத்துக் கொள்ள முடியும். இப்படி கரம் மசாலா தூள் அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், சைவ கிரேவி, அசைவ கிரேவி, உருளைக்கிழங்கு வருவல், கருணைக்கிழங்கு வறுவல், என்று கார கறிகளுக்கு எல்லாம் இந்த மசாலாவை சேர்த்து சமைக்கும் போது அதனுடைய வாசம் மணக்க மணக்க இருக்கும். இதனுடைய ருசி சொல்லவே தேவையில்லை. அட்டகாசமான ருசி இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் படி உங்களுடைய சமையலை மாற்றுவதற்கு இந்த பொடி உதவியாக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபி பார்த்து விடலாம்.
செய்முறை
இந்த கரம் மசாலா அரைக்க முதலில் தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். வர மல்லி – 1/2 கப், சீரகம் – 1/4 கப், 4 பட்டை துண்டு – 3 இன்ச்சில், கிராம்பு – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2 டேபிள் ஸ்பூன், கருப்பு ஏலக்காய் – 8, ஜாதிக்காய் – 1, அன்னாசி பூ – 2, மிளகு – 1 டேபிள் ஸ்பூன், ஜாவித்திரி – 2 துண்டுகள், பிரியாணி இலை – 4, சோம்பு – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து வர மல்லியை போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வறுக்க வேண்டும். வர மல்லி வாசம் வரும் வரை, நிறம் மாறி வரும் வரை வருத்து அதை அப்படியே ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் சீரகத்தை போட்டு ஒரு நிமிடம் மட்டும் வறுத்து கருக விடாமல் அதையும் ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் மீதம் இருக்கும் மற்ற மசாலா பொருட்களை எல்லாம் போட்டு வறுக்க வேண்டும். இரண்டு நிமிடம் போல இந்த பொருட்கள் எல்லாம் சூடாகி வந்தவுடன், அடுப்பை அணைத்து விடவும். இந்த பொருட்களை கையில் தொட்டுப் பார்த்தால் கை பொறுக்கும் அளவுக்கு சூடு இருக்க வேண்டும். கையில் எடுத்தால் இந்த பொருட்கள் எல்லாம் அப்படியே கொதிக்க வேண்டும். அந்த அளவுக்கு சூடு செய்து அடுப்பை அணைத்தால் போதும்.
இப்போது வறுத்த இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசான பவுடராக அரைத்து ஒரு பாட்டிலில் கொட்டி டைட்டாக மூடி பிரிட்ஜில் வைத்தாலும் சரி, வெளியே வைத்தாலும் சரி, இது கெட்டுப்போகாது. அப்படியே தான் இருக்கும். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய சமையலுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு இந்த பொடியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு வருவல், கருணைக்கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல், காலிஃப்ளவர் வறுவல், மீல் மேக்கர் வறுவல், இப்படி கார வறுவலுக்கெல்லாம் இந்த பொடியை பயன்படுத்தலாம். சிக்கன் சுக்கா, மட்டன் சுக்கா, சிக்கன் குருமா, சிக்கன் குழம்பு மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல் மட்டன் வறுவல், என்று அசைவ குழம்பு வகைகளுக்கும் இந்த கரம் மசாலா தூள் நல்ல ஒரு வாசத்தை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: இட்லி, தோசைக்கு அள்ளி அள்ளி எடுத்து சாப்பிட சுவையான நிலக்கடலை சட்னி ஈசியாக எப்படி தயாரிப்பது? இப்படி சட்னி செய்து கொடுத்தால் கூடுதலா 2 இட்லி சாப்பிட தோணுமே!
பிரியாணிக்கு எல்லாம் கூட சரியான அளவு இந்த மசாலாவை சேர்த்து சமைக்கும் போது நல்ல வாசம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடையில் காசு கொடுத்து வாங்கும் மசாலாவை விட இப்படி நீங்களே ஃபிரஷ் ஆக அரைத்து பயன்படுத்தும் மசாலாவுக்கு ருசியும் வாசமும் அதிகமாக இருக்கும். ஒரே ஒரு முறை மேல் சொன்ன அளவுகளை பின்பற்றி இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.