மொறு மொறுவென்று இன்ஸ்டன்ட்டாக பஜ்ஜி மற்றும் பக்கோடா செய்வதற்கு கடைகளில் பஜ்ஜி மாவு இன்ஸ்டன்ட் மிக்ஸ் வகைகள் விற்பனைக்கு உள்ளன. இவற்றை காசு கொடுத்து கடையில் வாங்கி சுவைப்பதை விட, நம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இன்ஸ்டன்ட் பஜ்ஜி மாவு மிக்ஸ் எப்படி தயாரிப்பது? இதன் மூலம் சுடச்சுட மொறு மொறு பஜ்ஜி மற்றும் பக்கோடா எப்படி போடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
இன்ஸ்டன்ட் பஜ்ஜி மாவு செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சோடா உப்பு – கால் ஸ்பூன், சீரகத்தூள் – கால் ஸ்பூன்.
இன்ஸ்டன்ட் பஜ்ஜி மாவு செய்முறை விளக்கம்:
இன்ஸ்டன்ட் பஜ்ஜி மாவு செய்வதற்கு முதலில் ஒரு பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஒரு கப் அளவிற்கு சுத்தமான கடலை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். கடலை மாவு நீங்கள் வீட்டிலேயே அரைத்து வைத்துக் கொண்டால் பஜ்ஜி போட மட்டுமல்லாமல் முகத்திற்கு தேய்த்து குளிக்கவும் பயன்படுத்தலாம். கடைகளில் கிடைப்பது எவ்வளவு தரமானது என்பது நமக்கு தெரிவதில்லை.
ஒரு கப் கடலை மாவுடன், கால் கப் அளவிற்கு அதே கப்பில் அளந்து அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு பச்சரிசி, புழுங்கல் அரிசி, ரேஷன் அரிசி என்று எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் கால் ஸ்பூனுக்கும் கொஞ்சம் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் காரத்திற்கு தேவையான அளவிற்கு மிளகாய் தூள் பார்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக பஜ்ஜி மாவில் சோடா உப்பு எனப்படும் ஆப்ப சோடாவை சேர்ப்பது உண்டு. இந்த ஆப்ப சோடா பஜ்ஜி நன்கு உப்பி வருவதற்கு சேர்க்கப்படுகிறது. நீங்கள் தேவையில்லை, விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம். இல்லையென்றால் கொஞ்சம் கால் ஸ்பூனுக்கும் குறைவாக சேர்த்து கலந்து விட்டு விடுங்கள். இந்த மாவில் கைபடக்கூடாது எனவே கரண்டியை பயன்படுத்தி நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.
இதனுடன் கால் ஸ்பூன் அளவுக்கு சீரகத்தூள் சேர்க்கலாம். சீரகத்தை கையில் எடுத்து ஒரு முறை நன்கு நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டியது தான். பின்னர் இவை எல்லாவற்றையும் ஒருமுறை நன்கு கலந்து விட்டு ஒரு ஏர்டைட் கண்டெய்னரில், காற்று புகாதபடி அடைத்து வைத்து விட்டால், தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இன்ஸ்டன்டாக செய்யக்கூடிய இந்த பஜ்ஜி மாவு ரொம்பவே சுவையானதாக நிச்சயம் இருக்கும். பஜ்ஜி மட்டுமல்லாமல், இந்த மாவில் வெங்காய பக்கோடா கூட மொறு மொறுவென்று சூப்பராக செய்து அசத்தலாம்.
இன்ஸ்டன்ட் பஜ்ஜி மாவு கடைகளில் வாங்கி சமைப்பதை விட, இது போல நாம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயார் செய்து வைத்துக் கொண்டால் இரண்டு நிமிடத்தில் கேட்கும் போதெல்லாம் வீட்டில் செய்து கொடுத்து மகிழலாம். அதுமட்டுமல்லாமல் யாராவது விருந்தினர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து விட்டாலும் சட்டுனு டீயுடன் ரெண்டு பஜ்ஜி போட்டுக் கொடுத்தால் ரொம்பவே உங்களை பாராட்டுவார்கள்.
இன்ஸ்டன்ட் பஜ்ஜி மாவு மிக்ஸ் இப்படி நாமும் வீட்டிலேயே தயார் செய்து வைத்துக் கொண்டால், இனி ஸ்நாக்ஸ்-க்கு என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டாம். சட்டுன்னு ஒரு வெங்காயத்தை நறுக்கி உதிர்த்து மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து விட்டால், மொறு மொறு வெங்காய பக்கோடா ரெடி! உருளைக்கிழங்கு, வாழைக்காய், வெங்காயம், குடைமிளகாய் போன்றவற்றிலும் இந்த பஜ்ஜி மாவு கொண்டு செய்து பாருங்கள், இதன் சுவை புரியும்.