ஹோட்டலில் கிடைக்கும் மசால் தோசை போலவே உங்களுடைய வீட்டிலும் சிவப்பாக மொறு மொறுன்னு மசால் தோசை சுட ஆசையா இருக்கா? மாவு அரைக்கும் போது இந்த பொருளை சேர்த்துக்கோங்க. ஹோட்டல் தோசை வீட்டிலேயே கிடைக்கும்.

dosai_tamil
- Advertisement -

ஹோட்டல் மசால் தோசை யாருக்குத்தான் பிடிக்காது. மேலே தக தகவென பொன்னிறத்தில் ஜொலிக்க கூடிய அப்படி ஒரு தோசையை என்னதான் தலைகீழ நின்றாலும் நம்மால் வீட்டில் சுட முடியாது. காரணம் நாம் அறைக்கக் கூடிய மாவின் பக்குவம். இட்லிக்கு அரைப்பது போலவே மாவு அரைத்து அதே மாவில் தோசை வார்த்தால் நிச்சயமாக நன்றாக வராது. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி தோசை சுட்டுப் பாருங்கள். ஹோட்டல் தோசை உங்களுடைய வீட்டிலும் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்கள் தோசை சாப்பிட ஹோட்டலுக்கு போக மாட்டாங்க. உங்க கிட்ட தான் வருவாங்க.

இட்லி அரிசி – 3 கப், உளுத்தம் பருப்பு – 1 கப், அவல் – 1/2 கப், வெந்தயம் – 1 ஸ்பூன், துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், ஊற வைக்க இந்த பொருட்கள் இந்த அளவுகளில் நமக்குத் தேவை. ஒரு பாத்திரத்தில் அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, இவைகளை எல்லாம் போட்டு கழுவி தனியாக ஊறவைத்து விடுங்கள். இன்னொரு பாத்திரத்தில் வெந்தயம், உளுந்தம் பருப்பு, போட்டு தனியாக கழுவி ஊற வைத்து விடுங்கள். இன்னொரு பாத்திரத்தில் அவல் தண்ணீரில் போட்டு எடுக்க வேண்டும். 10 நிமிடங்கள் மட்டுமே அவல் ஊறினால் போதும். அதையும் தனியாக தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அவல் தவிர மற்ற பொருட்கள் எல்லாம் மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஊறட்டும். அதன் பின்பு எப்போதும் போல கிரைண்டரில் உளுந்து வெந்தயத்தை பொங்க பொங்க ஆட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து உளுந்தை வழித்து விட்டு அதில் அரிசி துவரம் பருப்பு கடலைப்பருப்பு அவல் எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு 98 சதவிகிதம் அறைந்து விட வேண்டும். மாவை ரொம்பவும் மொழு மொழு என அரைத்து விடக் கூடாது.

இப்போது நமக்கு மாவு தயாராகி விட்டது. இரண்டு மாவையும் ஒன்றாக போட்டு கையில் கரைத்துக் கொண்டாலும் சரி, அல்லது கிரைண்டரில் அரைபட்டுக் கொண்டிருக்கும் அரிசி மாவில் அரைத்து வைத்திருக்கும் உளுந்தைக் கொட்டி ஒரு ஓட்டு ஓட்டி வழித்து கரைத்துக் கொண்டாலும் சரி. அது உங்கள் சௌகரியம். ஆக மொத்தத்தில் அரிசி மாவு உளுந்து மாவும் நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மாவில் இருந்து உங்களுக்கு தேவையான மாவை மட்டும் சின்ன கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு 5 லிருந்து 6 தோசை சுட போறீங்க. இப்ப அந்த தோசை மாவை தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் எடுத்து ரவை – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சர்க்கரை – 1 ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் போட்டு மாவு திக்காக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து, அப்படியே கல்லில் தோசை வார்த்து பாருங்க. சிவந்து மொறுமொறுன்னு அப்படியே ஹோட்டல் தோசை போலவே உங்களுக்கு வரும். எண்ணெய்  அல்லது நெய் எது வேண்டுமென்றாலும் ஊற்றி சுட்டுக் கொள்ளலாம்.

இதன் மேலே உங்கள் சௌகரியம் போல மசாலா செய்து வைத்து சுருட்டி கொடுத்தால் கேட்கவே வேண்டாம். சூப்பரான ருசியில் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டு விடுவார்கள். கூடவே சட்னி சாம்பார் வைக்க மறந்துடாதீங்க. ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -