அருமையான முட்டை குருமா ஹோட்டல் ஸ்டைலில் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க வீடே மணக்கும். அனைவரும் விரும்பும் ஹோட்டல் ஸ்டைல் எக் குருமா ஈசி ரெசிபி!

egg-gravy-kurma2
- Advertisement -

பொதுவாக முட்டையை வேக வைத்து கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் அவித்த முட்டையை இது போல கிரேவி, குருமா போன்று செய்து கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். அதிலும் ஹோட்டல் ஸ்டைலில் அருமையான சுவையில் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்கள், எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் பத்தவே பத்தாது! அவ்வளவு சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பும் ஹோட்டல் ஸ்டைல் எக் குருமா எப்படி எளிதாக வீட்டில் செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

முட்டை குருமா செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 5, சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பூண்டு – 10 பல், சின்ன வெங்காயம் – 10, இஞ்சி – ஒரு சிறு துண்டு, வரமிளகாய் – 3, உப்பு – தேவைக்கு ஏற்ப, தக்காளி – 3, தேங்காய் துண்டுகள் – ஒரு கைப்பிடி, சோம்பு – ஒன்றரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், ஏலக்காய் – 5, பட்டை – இரண்டு, கசகசா – ஒரு டீஸ்பூன், முந்திரி – 10, கிராம்பு – 4, கொத்தமல்லி தழை – சிறிதளவு, பிரிஞ்சி இலை – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன், மல்லி தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

முட்டை குருமா செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான அளவிற்கு முட்டைகளை உடையாமல் சரியான பதத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இதனுடன் ரெண்டு இன்ச் அளவிற்கு இஞ்சியை தோல் சீவி நறுக்கி சேர்த்து வதக்குங்கள்.

இவை ஓரளவுக்கு வதங்கி வரும் பொழுது, காரத்திற்கு வர மிளகாய்களை சேர்த்து கொஞ்சம் போல் உப்பு போட்டு பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள், சீக்கிரம் வதங்கும். ரெண்டு நிமிடம் வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே ஜாரில் ஒரு கைப்பிடி அளவிற்கு தேங்காய் துண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், முந்திரி பருப்பு, கிராம்பு, சிறிதளவு கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து இதையும் நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் வேறொரு கடாய் ஒன்றை வையுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததில் பிரிஞ்சு இலை, கொஞ்சம் சோம்பு போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்றை சேர்த்து, கருவேப்பிலை போட்டு வதக்கி கொள்ளுங்கள். இவை மசிய வதங்கி வரும் பொழுது மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் கலந்து விட்ட பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையையும் சேர்க்க வேண்டும்.

பின்னர் மூடி போட்டு ஐந்து நிமிடம் சிம்மிலேயே வேக விடுங்கள். எண்ணெய் தெளிந்து குழம்பு கொதித்து வரும் இந்த சமயத்தில், நீங்கள் வேக வைத்துள்ள முட்டைகளை எடுத்து ஆங்காங்கே லேசான கீறல்களை போட்டு கிரேவியுடன் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் மீண்டும் மூடி போட்டு குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வேக வையுங்கள். முட்டையில் கிரேவி இறங்கி குழம்பு திரண்டு கிரேவியான குருமா போல வரும். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சுடச்சுட சாதத்துடன் பரிமாறி பாருங்கள், அருமையான டேஸ்டில் ஹோட்டல் சுவையில் நிச்சயம் இருக்கும், நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -