ஒவ்வொரு நாளும் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஏதாவது ஒரு பொரியல் செய்து வைக்க வேண்டியதென்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி செய்யும் பொரியல் அனைவருக்கும் பிடித்ததாக இருக்க வேண்டும். அதுவும் குழம்புடன் சேர்த்து சாப்பிட இந்த பொரியல் ஏற்ற ருசியில் இருக்க வேண்டும். அப்படி சாம்பார், காரகுழம்பு, குருமா, கீரை, தயிர், ரசம் இவை அனைத்துடனும் சேர்த்து சாப்பிட மிகவும் ஏற்ற வகையில் இருக்கக் கூடியது தான் இந்த காலி ஃபிளவர் மிளகு வருவல். இந்த காலி ஃபிளவர் மிளகு வறுவலை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். மீண்டும் இதை எப்போது செய்வீர்கள் என்று வீட்டில் உள்ளவர்கள் உங்களை தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும். வாருங்கள் இந்த காளிஃப்ளவர் மிளகு வறுவலை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
காலிஃபிளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், மிளகு – 2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கடுகு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து, அதனை அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு அந்த தண்ணீரில் காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
சிறிது நேரம் தண்ணீரிலேயே விட்டுவிட்டு காலிஃப்ளவரை தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பைப் பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடானதும் அதில் 5 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாய், தக்காளி இவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் இவற்றுடன் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, தட்டு போட்டு மூடி வைக்கவேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து காலிஃபிளவர் பாதி வெந்தவுடன் ஒரு ஸ்பூன் மிளகை நன்றாக பொடித்து சேர்க்க வேண்டும். பின்னர் கலந்துவிட்டு, ஐந்து நிமிடத்திற்கு அப்படியே விட்டுவிட வேண்டும். அதன் பிறகு அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான காலிஃப்ளவர் மிளகு வறுவல் சட்டென தயாராகிவிட்டது.