புதினா சட்னி இவ்வளவு ருசியாக இருக்க இது தான் காரணமா? 5 நிமிடத்தில் சுவையான ஹோட்டல் சுவையில் புதினா சட்னி எப்படி வைப்பது?

puthina-chutney
- Advertisement -

எல்லா வகையான சட்னிகளை காட்டிலும் புதினா சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவையுடையதாக இருக்கும். எல்லோருக்கும் மிகவும் பிடித்த இந்த புதினா சட்னியை ஹோட்டல் சுவையில் வீட்டில் செய்வது கடினமாக இருக்கிறது. ரொம்பவே சுலபமாக ஹோட்டல் சுவையில் புதினா சட்னியை நாமும் வீட்டிலேயே எப்படி செய்வது? புதினா சட்னியின் ரகசியம் என்ன? கெட்டியாக துவையலாகவும், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சட்னியாகவும் செய்யக்கூடிய இந்த சுவை மிகுந்த புதினா சட்னி செய்முறையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – கால் கப், சின்ன வெங்காயம் – 15, பூண்டு பற்கள் – 4, இஞ்சி – 2 இன்ச், பச்சை மிளகாய் – 5, காய்ந்த மிளகாய் – மூன்று, புதினா – இரண்டு கைப்பிடி, மல்லி – ஒரு கைப்பிடி, தேங்காய் துருவல் – ஒரு கப், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, கட்டி பெருங்காயம் – ஒரு துண்டு, தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

புதினா சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டு கட்டி பெருங்காயத்தை சேர்த்து பொரிய விடுங்கள். கட்டி பெருங்காயம் இல்லாதவர்கள் தாளிக்கும் பொழுது பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கலாம். பொரிந்த பெருங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கால் கப் அளவிற்கு உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்குங்கள். புதினா சட்னிக்கு உளுத்தம் பருப்பு தான் அதிகம் சேர்க்க வேண்டும்.

உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும் தனியாக எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு 15 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் சேர்க்கும் பொழுது புதினா சட்னி அதிக ருசி தரும். இதனுடன் 4 பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் மற்றும் பூண்டு நன்கு வதங்கி வரும் பொழுது இரண்டு இன்ச் அளவிற்கு இஞ்சியை துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

இவற்றின் பச்சை வாசம் போனதும் பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். உங்கள் காரத்திற்கு ஏற்ப இவற்றின் எண்ணிக்கையை கூட்டி குறைத்துக் கொள்ளுங்கள். இவை நன்கு வறுபட்டதும் நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை பிரஷ்ஷாக இரண்டு கைப்பிடி அளவிற்கு எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு ஒரு கைப்பிடி மல்லி தழைகளை சேர்க்க வேண்டும். இவை சுருண்டு வருமாறு லேசாக வதக்க வேண்டும்.

பிறகு ஒரு கப் அளவிற்கு தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காயை துண்டுகளாக நறுக்கியும் சேர்க்கலாம். தேங்காய் நன்கு வறுபட்டதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறியதும் இப்போது மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பொரித்து வைத்துள்ள கட்டி பெருங்காயம் மற்றும் உளுந்தம் பருப்பையும் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.

புதினா சட்னி கெட்டியாக இருந்தால் தான் சுவையும் நன்றாக இருக்கும். இதை அப்படியே துவையலாகவும் வைத்து சாப்பிடலாம். இதற்கு இப்போது ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் ஆகியவற்றை தாளித்தம் செய்து புதினா சட்னியுடன் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி வைத்தால் போதும். இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்தில் கூட அப்படியே பிசைந்து சாப்பிட்டு விடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். இதே முறையில் இதே அளவில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -