ஹோட்டலில் செய்யும் அதே சுவையில் அசத்தலான புடலங்காய் கூட்டை வீட்டிலேயும் செய்திடலாம்

pudalangai-kuttu
- Advertisement -

காய்கறி பொரியல் என்றாலே வீட்டில் உள்ளவர்கள் அலறியடித்து ஓடி விடுவார்கள். அந்த அளவிற்கு இன்றைய தலைமுறையினர் அசைவ உணவை விருப்பமாக சாப்பிடுவது போன்று சைவ உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் அசைவ உணவுகளை விட சைவ உணவுகளில் தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே தினமும் ஏதேனும் ஒரு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஹோட்டல்களில் செய்யும் காய்கறி உணவுகளை விருப்பமாக சாப்பிடும் குழந்தைகளுக்கு வீட்டிலும் அதே சுவையில் சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறான ஹோட்டல் டெஸ்டில் இருக்கக் கூடிய புடலங்காய் கூட்டடை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
புடலங்காய் – கால் கிலோ, கடலை பருப்பு – 50 கிராம், பாசிப்பருப்பு – 50 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, பூண்டு – 6 பல், தேங்காய் 2 சில்லு சீரகம் ஒரு ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கார மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு குக்கரில் 50 கிராம் கடலைப் பருப்பு, 50 கிராம் பாசிப்பருப்பு சேர்த்து அவற்றை இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவிக் கொண்டு, அதனுடன் 3 பல் பூண்டு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், 3 பச்சை மிளகாய் மற்றும் 2 தக்காளியை நான்காக அரிந்து சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி அடுப்பின் மீது வைக்க வேண்டும். குக்கரில் 3 விசில் வரும் வரை பருப்பை வேக விட வேண்டும்.

பிறகு வெங்காயம் மற்றும் பச்சை புடலங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும், அதனுடன் புடலங்காய் சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இவற்றுடன் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு சில்லு தேங்காய் ஒரு ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்க்கு அரைத்து புடலங்காயுடன் சேர்க்க வேண்டும்.

பிறகு வேக வைத்த பருப்பை லேசாக கடைந்து இவற்றுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -