1 கப் சாதம் இருக்கா உங்க வீட்ல! இப்படி ஒரு முறை இடியாப்பம் செஞ்சு பாருங்க! ஹோட்டல் இடியாப்பத்தை விட சூப்பரா வரும்.

idiyappam4

வீட்டில் இடியாப்பம் செய்ய வேண்டும் என்றாலே, பெரிய வேலையாக தெரியும். ஆனால், நம் வீட்டில் சுலபமான முறையில், இரண்டு பொருட்களை வைத்து, சுவையாக இடியாப்பத்தை சட்டென்று செய்து விடலாம். மாவு அரைக்க தேவையில்லை! சிரமப்பட தேவையில்லை! உங்களுக்கு சுவையான இடியாப்பம் செய்ய வேண்டும் என்றால் இந்த முறையைப் பின்பற்றினாலே போதும்! எந்த பொருட்களை வைத்து, இந்த இடியாப்பத்தை செய்தீர்கள் என்று மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது அந்த அளவிற்கு சுவையான இடியாப்பம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

idiyappam

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் – 1 கப்
பச்சரிசி மாவு – 3/4 கப்
தேவையான அளவு – உப்பு

மதியம் வடித்த சாதமாக இருந்தாலும், அதை பயன்படுத்தி இரவு நேரத்தில் இந்த இடியாப்பத்தை செய்துவிடலாம். முதலில் சாதத்தை மிக்ஸியில் போட்டு, சிறிய குழிக்கரண்டி அளவு தண்ணீர் விட்டு, மொழு மொழுவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாதம் அரையாமல் இருந்தால், இடியாப்ப அச்சில் பிழியும் போது, சிறிய ஓட்டையில் அடைத்துக் கொள்ளும்.

idiyappam1

நன்றாக மசித்த சாதத்தை, மிக்ஸியில் இருந்து தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி, 3/4 கப் அளவு அரிசி மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தில் சேர்த்து, தேவையான அளவு உப்பையும் சேர்த்து, இடியாப்ப மாவு பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். கையில் மாவு ஒட்டாத பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அரிசி மாவு சேர்த்து பிசைந்த இடியாப்ப மாவு, கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மையோடு இருந்தால், இன்னும் கொஞ்சம் அரிசி மாவை சேர்த்து பிசைந்து கொள்ளலாம். இந்த மாவின் மேல், எண்ணெய் தடவி ஒரு 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். மாவு 10 நிமிடங்கள் வரை ஊறட்டும்.

idiyappam2

அதன் பின்பாக, இடியாப்ப அச்சில், கொஞ்சமாக உள்பக்கமாக எண்ணை தடவி கொள்ளுங்கள். இந்த மாவை, இடியாப்ப அச்சில் போட்டு, உங்கள் வீட்டில் இடியாப்ப தட்டு இருந்தால், அதிலும் கொஞ்சமாக எண்ணெய் தடவி, இடியாப்பத்தை பிழிந்து கொள்ளலாம். இல்லை என்றால், இட்லி தட்டிலேயே, கொஞ்சம் எண்ணெய் தடவி, இடியாப்பத்தை பிழிந்து கொள்ளுங்கள். 3 நிமிடங்கள் வரை, இட்லி சட்டியில், கலவையின் மேல், வேக வைத்து எடுத்தால் போதும். முதலில் இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி விட்டு, நன்றாக கொதித்ததும், அதன்பின்பு இடியாப்பத்தை அதனுள் வையுங்கள். சுவையான மிருதுவான இடியாப்பம் தயார் ஆகிவிடும்.

idiyappam3

இனிமேல் இடியாப்பம் செய்ய கஷ்டப்பட்டு, அரிசியை கழுவி, மாவு அரைக்க தேவையில்லை. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இந்த இடியாப்பத்திற்கு அசைவ பிரியர்களாக இருந்தால், சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி வைத்து சாப்பிடலாம். சைவ பிரியர்களாக இருந்தால், தேங்காய்ப் பால் அல்லது ஒரு கார சட்னி, குருமா இவைகளை சைட் டிஷ்ஷாக வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மொறு மொறு, காரசாரமான டைமன்ட் சிப்ஸ்! ஒருவாட்டி உங்க வீட்டுல இப்படி செஞ்சு பாருங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.