1 கப் இட்லி மாவு இருந்தால் போதும். சூப்பரான மெதுவடை 10 நிமிடத்தில் தயார்.

vadai4
- Advertisement -

உளுந்து ஊற வைத்து தனியாக மாவு ஆட்டித்தான் வடை சுட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இட்லிக்கு மாவு அரைக்கும் போது, தோசை மாவு இருக்கும் போது கூட நாம் சூப்பராக  மெதுவடை செய்யலாம். மாவு கொஞ்சம் தண்ணியாக இருக்குமே எண்ணெய் குடிக்காதா என்ற சந்தேகம் எல்லாம் தேவையில்லை. 1 கப் தோசை மாவு இருந்தாலும் சரி, 1 கப் இட்லி மாவு இருந்தாலும் சரி, அதை வடை மாவாக மாற்றுவது எப்படி என்பதை பற்றிய குறிப்பு இதோ உங்களுக்காக.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அதில் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவு அல்லது தோசை மாவு ஏதாவது ஒன்றை ஊற்றிக் கொள்ள வேண்டும். (ஒரு சின்ன கப் மாவு எடுத்து முயற்சி செய்து பாருங்கள்.) மாவில் உப்பு போட்டு இருந்தால் இந்த இடத்தில் உப்பு சேர்க்க வேண்டாம் அல்லது உப்பு குறைவாக இருக்கும் என்று நினைத்தால் தேவையான அளவு உப்புத்தூள், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 10, இஞ்சி துருவல் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பொடியாக நறுக்கியது இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு கரண்டியை வைத்து இந்த மாவை மூன்று நிமிடம் போல கலந்து விட்டால் மாவு கொஞ்சம் கெட்டிபிடிக்க தொடங்கி விடும்.

- Advertisement -

மாவு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். மாவு நன்றாக சூடு ஆறிய பின்பு இதில் பொடியாக நறுக்கிய கருவாப்பிலை, கொத்தமல்லி தழைகளை, சேர்த்து தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, உங்கள் கையை கொண்டு பிசைய வேண்டும். சூப்பரான மாவு நமக்கு கிடைத்திருக்கும். இதை தேவையான சைஸில் சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வடை போல தட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு செய்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, ஒவ்வொரு வடையாக போட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான மெதுவடை தயார். இதை ரொம்பவும் தடிமனாக தட்ட வேண்டாம். உள்ளே வேகாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக மிதமான தீயில் தான் இதை சிவக்க வைத்து எடுக்க வேண்டும்.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு இது குட்டி குட்டி போண்டாவாக தேவை என்றால் கூட சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள ஒரு தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியை பரிமாறலாம். டீ காபி குடிக்கும் போது சூப்பரான ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.

பின்குறிப்பு: புதுசாக அரைத்த புளிக்காத இட்லி தோசை மாவில் இதை செய்யலாம். அல்லது ஒரே ஒரு நாள் புளித்த மாவில் செய்யலாம். மாவு ரொம்பவும் புளித்த பிறகு இந்த வடை செய்தால், லேசாக புளிப்பு தெரியும். அதேபோல நிறைய வெந்தயம் சேர்த்து இட்லி தோசை மாவு அரைப்பவர்களாக இருந்தால் லேசாக கசப்பு தெரியும். ஒரு ஸ்பூன் அளவு வெந்தயம் போட்டு இட்லி மாவு அரைத்து எடுத்தால் இதில் கசப்பெல்லாம் தெரியாது. சில பேர் தோசை நிறைய சிவக்க வேண்டும் என்பதற்காக நிறைய வெந்தயம் சேர்த்து விடுவார்கள். அப்போது சுவை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -