இந்த ஒரு பொருள் நம்ம வீட்டுல இருந்துச்சுன்னு சொன்னா, அதுவும் நம்மளே தயார் பண்ணி வச்சிக்கிட்டா, நம்ம வயிறு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் நம்மகிட்ட வரவே வராது. அது என்ன தெரியுமா? அது தான் இஞ்சி புளி. இஞ்சி புளியா? அது என்ன புதுசா இருக்கு? என்னவா இருக்கும்? என்று யோசிக்கும் உங்களுக்கு இந்த பதிவில் இஞ்சி புளி எப்படி செய்வது என்று தான் கூற போகிறோம். இதை நாம் பல வகைகளில் பயன்படுத்தலாம். ஊறுகாயாக, சாதத்தில் போட்டு சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளவும், இந்த இஞ்சி புளியை உபயோகப்படுத்தலாம். இது ஜீரண சக்தியை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆதலால் எந்த தயக்கமும் இன்றி அனைவர் வீட்டிலும் இந்த இஞ்சி புளி கட்டாயம் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இப்பொழுது இஞ்சி புளி எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 100 கிராம், வெல்லம் – 100 கிராம், புளி – 100 கிராம், மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, கடுகு – தாளிப்பதற்கு, உப்பு – தேவையான அளவு, கடலைப்பருப்பு – ஒரு பெரிய ஸ்பூன் அளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, சமையல் எண்ணெய் – 50 கிராம்,
செய்முறை
முதலில் சிறிதளவு நீர் ஊற்றி புளியை ஊற வைக்க வேண்டும். பிறகு இஞ்சியை தோள் நீக்கி நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பை பற்றவைத்து அதில் வாணலியை வைத்து அதில் 50 கிராம் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு, கடுகை அதில் போட வேண்டும். கடுகு வெடித்ததும் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் துண்டுகளையும், கடலை பருப்பையும் போட வேண்டும். பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி துண்டுகளையும் அதில் சேர்க்க வேண்டும்.
பிறகு சிறிதளவு கருவேப்பிலையும் சேர்த்து வதக்க வேண்டும். நாம் ஏற்கனவே ஊற வைத்திருக்கும் புளியை நன்றாக கரைத்து, சக்கை, கொட்டைகளை நீக்கி கெட்டியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி நன்றாக வதங்கிய பிறகு, இந்த புளி கரைசலை வாணலியில் ஊற்ற வேண்டும். அத்துடன் அதற்கு தேவையான அளவு உப்பையும், சிறிதளவு மஞ்சள் தூளையும், மிளகாய் தூளையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
கொதிக்கும் போது வெல்லத்தை அதில் சேர்க்க வேண்டும். இந்த கரைசல் நன்கு சுண்டியதும், அதாவது எண்ணெய் பிரிந்து வரும் வரை சுண்டியதும் வாணலியை இறக்கி வைக்க வேண்டும். இதுதான் இஞ்சி புளி. இதை நாம் ஊறுகாய் போல பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தும்போது நாம் நேரடியாக விரல்களை வைத்து எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால், இஞ்சி புளி கெட்டுப் போய்விடும். மர ஸ்பூனை உபயோகப்படுத்த வேண்டும்.
பொதுவாக கைப்படாமல் இந்த இஞ்சி புளியை வெளியில் வைத்திருந்தால் ஒரு வாரத்திற்கு மேல் கெடாமல் இருக்கும். சத்தான, ஆரோக்கியமான, சுவையான இஞ்சி புளியை நாமும் வீட்டில் செய்து தினமும் உண்டு மகிழ்வோம்