அரிசி, உளுந்து சேர்க்காமல் இன்ஸ்டன்ட் மாவு அரைக்க இந்த 2 பொருள் போதுமே! சும்மா பஞ்சு போல தோசை சுடலாம்.

dosai-maavu
- Advertisement -

அவசரமான நேரங்களில் வீட்டில் மாவு இல்லாத சமயங்களில் அரிசி, உளுந்து சேர்க்காமல் இன்ஸ்டன்ட் தோசை மாவு செய்து சாப்பிடலாம். இன்ஸ்டன்ட் ஆக செய்வதால் இதில் இட்லி சூப்பராக வராது. எனவே சுடச்சுட மெத்தென்று பஞ்சு போல இருக்கும் தோசை ரொம்பவே சுவையானதாக செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாம். இந்த ரெண்டு பொருள் நம் கைவசம் இருந்தால் அரை மணி நேரத்தில் தோசை மாவை அரைத்து தோசை சுட்டு செய்து சாப்பிட்டே விடலாம். அந்த அளவிற்கு சுலபமாக இருக்கக் கூடிய இந்த தோசை மாவு செய்வது எப்படி? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

vendhaya-dosai4

தோசை மாவு செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – 200 கிராம், அவல் – 100 கிராம், தயிர் – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சோடா உப்பு – கால் டீஸ்பூன்.

- Advertisement -

தோசை மாவு செய்முறை விளக்கம்:
முதலில் 200 கிராம் அளவிற்கு ரவையை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த ரவை, வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ரவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல இன்னொரு பவுலில் அவல் எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை அவல், சிகப்பு அவல், தட்டை அவல் எந்த அவலாக இருந்தாலும் பரவாயில்லை. அதை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசி வடிகட்டி பின்னர் அதையும் மூழ்கும் அளவிற்கு மேல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

aval-idli4

ரவை மற்றும் அவல் இரண்டும் குறைந்தது அரை மணி நேரம் ஊறினால் போதும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஊற வைத்த ரவையை தண்ணீர் வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த அவலையும் தண்ணீர் வடிகட்டி விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்க்க வேண்டும். தயிர் கெட்டியாக இருக்க வேண்டும். இந்த மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த இன்ஸ்டன்ட் மாவுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு சமையல் சோடா எனப்படும் சோடா உப்பை கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் இன்ஸ்டன்டாக தோசை வார்க்கும் பொழுது சோடா உப்பு சேர்த்தால் தான் தோசை மிருதுவாக வரும். சோடா உப்பு சேர்க்க விரும்பாதவர்கள் இந்த மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விட்டு பின்னர் தோசை வார்த்தால் சூப்பராக வரும்.

dosai

அவ்வளவுதான்! இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக்கல்லை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெயை பரவலாகத் தேய்த்து இரண்டு கரண்டி மாவு எடுத்து கல் தோசை சுட்டால் மாவை ஊற்றிய உடன் ஓட்டைகள் விழுந்து சூப்பராக மிருதுவாக வெந்துவிடும். பஞ்சு போல சூப்பரான தோசை சுட இனி அரிசி, உளுந்து இரண்டுமே தேவையில்லை. அவசரமான சமயங்களில் இது போல இன்ஸ்டன்ட் ஆக தோசை செய்து சாப்பிடலாம். இதே முறையில் நீங்களும் செய்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -