இட்லி மாவு இல்லாமல் மிகவும் சுவையான இந்த தக்காளி தோசையை நினைத்த வேளையில் சட்டென செய்து சாப்பிட முடியும்

tomato1
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் வீட்டிலுள்ள பெண்கள்தான் சமயலறையில் அனைத்து விதமான சமையல் வேலைகளையும் செய்கின்றனர். இப்பொழுது உள்ள குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைனில் வகுப்புகள் படித்துக் கொண்டிருப்பதால் வீட்டிற்கு உதவியாக எந்த ஒரு வேலையையும் செய்வதில்லை. இவ்வாறு வீட்டு வேலைகள் தெரியாமல் வளரும் குழந்தைகள் படிக்க செல்லும் பொழுது தனியாக இருக்க வேண்டிய அவசியம் வந்தாலும், வேலைக்கு செல்லும் பொழுது தனியாக வாழ வேண்டிய அவசியம் வந்தாலும் சமைப்பது என்பது அவர்களுக்கு கடினமாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது செய்யும் இந்த தக்காளி தோசையை சமையல் தெரியாதவர்கள் கூட உடனடியாக சுலபமாக செய்ய முடியும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. இந்த தோசையை மட்டும் சாப்பிட்டாலே போதும் அவ்வளவு சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான தக்காளி தோசையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி – 6, வர மிளகாய் – 5, மிளகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, ரவை – முக்கால் கப், அரிசி மாவு – முக்கால் கப், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இஞ்சி மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு இவற்றுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கி விட்டு, 5 வறமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றை வேறொரு தட்டிற்கு மாற்றி, நன்றாக ஆற வைத்து, அதன்பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் முக்கால் கப் ரவை, முக்கால் கப் அரிசி மாவு எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அதனுடன் ஒரு கொத்து கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் மூன்றரை கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு கப் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கலந்துவிட வேண்டும். மொத்தம் மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்ட பின்னர், இந்த மாவு ரவா தோசை மாவு பதத்திற்கு தண்ணீராக இருக்க வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து, தோசை ஊற்றி எடுத்தால் சுவையான தக்காளி தோசை தயாராகிவிடும்.

- Advertisement -