இன்றைய அவசர கால சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறிக் கொண்டே இருந்தாலும் சில விஷயங்களை இன்னும் பழமைகளை மறக்காமல் தான் இருக்கிறோம். அந்த வகையில் இன்னும் கூட பல பேர் இரும்பு தோசைக் கல், இரும்பு சட்டி போன்றவற்றை பயன்படுத்தவே விரும்புகிறார்கள். சிலர் அதை விடுத்து நான் ஸ்டிக்கை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் அதில் பழக்க வேண்டிய அவசியம் இல்லை. கையாள்வதும் மிகவும் சுலபம் அப்படியானவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு புதிய இரும்பு சட்டியை வாங்கி எப்படி எளிமையாக பழக்கி பயன்படுத்துவது என்பதை எல்லாம் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இரும்பு சட்டியை பழக்குவதற்கு முதலில் அதை வாங்கும் போதே அது இதற்கு முன்பே சீசனிங் செய்ததா என்பதை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது. இதில் சீசனின் செய்த சட்டியை எப்படி பயன்படுத்துவது, செய்யாத சட்டி எப்படி பயன்படுத்துவது என்பதையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
புதிதாக வாங்கிய இரும்பு சட்டியை பழக்கும் முறை:
வாங்கிய இரும்பு சட்டியை அப்படியே அடுப்பில் வைத்து சூடானவுடன் ஒரு அரை வெங்காயத்தை சின்னதாக நறுக்கி அதில் சேர்த்து அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து வெங்காயம் நன்றாக கருகும் வரை வதக்கி எடுத்து விடுங்கள் இதன் மூலம் சட்டியின் மேல் இருக்கும் துரு மற்ற தூசிகள் எல்லாம் இந்த வெங்காயத்துடன் வந்து விடும். அதன் பிறகு ஒரு முறை சோப்பு போட்டு சட்டியை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் சீசனிங் செய்த சட்டியை வாங்கி இருந்தால் இந்த ஒரு முறையை மட்டும் செய்து விட்டு பயன்படுத்த தொடங்கலாம். சீசனிங் செய்யாத சட்டியாக இருந்தால் அடுத்தடுத்த குறிப்புகளை பார்த்து அதன்படி செய்து பழக்கி கொள்ளுங்கள்.
இப்போது வெங்காயம் வதக்கிய பிறகு கழுவிய சட்டியை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கி கொஞ்சமாக எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு சட்டியில் முழுவதுமாக வெற்றிலையை ஆங்காங்கே வைத்து வெற்றிலை நன்றாக சூடாகி கருகியவுடன் அடுப்பை மறுபடியும் லோ ஃபிலிமில் வைத்து சட்டி முழுவதும் வெற்றிலை கருகும் வரை அப்படியே தேய்த்து கொடுங்கள். வெற்றிலை கிடைக்காத பட்சத்தில் வாழை இலையும் நறுக்கி அதை சேர்த்து இதே போல செய்யலாம்.
இதை செய்த பிறகு இரும்பு சட்டியை நல்ல வெயில் படும் இடத்தில் அப்படியே அதில் இருக்கும் எண்ணையுடன் வைத்து விடுங்கள். இரண்டு நாள் வரை இதில் நன்றாக வெயில் பட வேண்டும். அப்போது தான் இந்த சட்டியில் சிறு சிறு துளைகளில் இந்த எண்ணெய் உள்ளே சென்று மூடி விடும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் இந்த சட்டியை பழக்க வேண்டிய அவசியமே இருக்காது. காலத்திற்கும் வைத்து பயன்படுத்த நன்றாக இருக்கும்.
இரண்டு நாள் கழித்து சட்டியை எடுத்து சோப்பு போட்டு எல்லாம் கழுவ கூடாது. நல்ல ஒரு காட்டன் துணி வைத்து சுத்தமாக துடைத்த பிறகு நீங்கள் சமைக்க தொடங்கலாம். ஒரு வேளை இரண்டு நாள் நாம் வெயிலில் வைத்திருந்தோம் எப்படி சமைப்பது ஒன்று உங்களுக்கு தோன்றினால், கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு லேசாக வதக்கி அதை தனியாக எடுத்து விட்டு மறுபடியும் எண்ணெய் விட்டு சமைக்க ஆரம்பித்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா இனி நீங்க வாங்கும் மளிகை பொருட்கள் ஒரு வருடம் ஆனால் கூட கெட்டுப் போகாம பாத்துக்கலாம்.
இந்த சீசனிங் முறை மிகவும் எளிமையானது தான். என்ன இரண்டு நாட்கள் வெயிலில் வைக்க வேண்டிய கால அவகாசத்தை மட்டும் தந்தால் போதும் காலத்திற்கும் வைத்து நல்ல முறையில் இரும்பு சட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல இரும்பு சட்டியை கழுவிய பிறகு எப்போதும் எண்ணெய் தடவி தான் வைக்க வேண்டும். அப்போது தான் அது துரு பிடிக்காது. இந்தக் குறிப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம். நீங்களும் இனி இரும்பு சட்டி வாங்கினால் இது போல பழகிப் பாருங்கள்.