2022 ஜூன் மாத ராசிபலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லியமான கணிப்பு!

june-month-rasi-palan
- Advertisement -

கிரக அமைப்புகளின் படி ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இப் பலன்கள் ஒவ்வொரு மாதமும் எப்படி மாறுகின்றன? இந்த சுபகிருது வருடத்திய ஆங்கில மாதமான ஜூன் மாதத்தில் 12 ராசியினருக்கும் எவ்விதமான பலன்கள் அமையப்பெற்றுள்ளன? அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்ட பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் முழுவதும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கக்கூடிய மாதமாக இருக்கிறது. இதுவரை நீங்கள் பின்வாங்கிய விஷயத்தில் கூட முன் நின்று வெற்றி இலக்கை அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளும் பதவி உயர்வு கிடைக்கும் யோகமும் உண்டு. கணவன் மனைவி இடையே பேச்சில் இனிமையை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் சாதக பலன் கொடுக்கும். பொருளாதார மேம்பாடு தன்னிறைவு கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். பரிகாரமாக தினமும் முருக மந்திரங்களை உச்சரியுங்கள்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் நீங்கள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியும் எவ்வளவு தடைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றி வாய்ப்புகளை தரும். மனதிற்கு பிடித்தவர்களை மனமுடைந்து கொள்ளும் யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே முடிந்தவரை ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளாமல் மனம் விட்டு பேசுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புகழ் போதை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர்வை பெறுவீர்கள். மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த சிறுசிறு மனக் கசப்புகளை தீர்த்துக் கொள்வீர்கள். பொருளாதாரம் ஏற்றத்துடன் இருக்கும். சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் வந்து நீங்கும். பரிகாரமாக சிவ அபிஷேகத்தில் கலந்து கொள்வது நல்லது.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் முழுவதும் உங்களுடைய பேச்சில் புது உத்வேகம் தென்படப் போகிறது. நிலுவையில் இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அவிழும். கணவன் மனைவி இடையே பனிப்போர் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசு சார்ந்த விஷயங்களில் உதவிகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் அகன்று தெளிவு உண்டாகும். சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் வெற்றியை அடையலாம். குழந்தைகள் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். பொருளாதார முன்னேற்றம் காணும். ஆரோக்கியத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டு. பரிகாரமாக பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வாருங்கள்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முழுவதும் உங்களுடைய தனிப்பட்ட முயற்சிகளுக்கு நீங்களே பொறுப்புகளை ஏற்க வேண்டி வரும். கூட்டு தொழில் புரிபவர்களுக்கு கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பு ஏற்படும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிணக்குகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் நல்லுறவு மேம்படும். போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உங்களுடைய உற்சாகமும் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள். மாணவர்களின் எதிர்காலம் பற்றிய கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். பரிகாரமாக ஆஞ்சனேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடுங்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சவாலான காரியங்களையும் சாதித்துக் காட்ட கூடிய நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களுடைய யோசனைகளுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வீணான பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாமல், உங்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. வழக்கு தொடர்பான விஷயத்தில் சாதக பலன் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களுடைய ஆலோசனை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் சமாளிக்கும் திறன் தேவை. உங்களுடைய சுய மதிப்பீட்டை நீங்களே பார்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி முடிவுகள் எடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு தேவை. பரிகாரமாக பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி கோவிலில் விளக்கு ஏற்றுவது நல்லது.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கக் கூடிய நல்ல அமைப்பாக உள்ளது. குடும்பத்தில் இருந்து வந்த சிறு சிறு மன கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். புதிய நபர்களின் வருகை உற்சாகத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பு உண்டு என்பதால் விடாமுயற்சியை கொடுங்கள். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமையை பயன்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்களின் எதிர்காலம் பற்றிய விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுங்கள். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. பரிகாரமாக தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு நீண்ட நாட்கள் தடைபட்ட காரியங்கள் ஒன்று நடக்க இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. நடக்கவே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயம் நடக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்யோசனை ஒவ்வொரு விஷயத்திலும் தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பது ஆபத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொடர் முன்னேற்றம் நிச்சயம். உங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய சரியான காலகட்டமாக இருக்கப்போகிறது எனவே சோம்பல் நீங்கி சிரமப்படுவது நல்லது. மாணவர்களின் திறமை ஊக்குவிக்கப்படும். பொருளாதார ஏற்றம் உண்டு. ஆரோக்கிய பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள். பரிகாரமாக பசித்தவர்களுக்கு அன்னதானம் அளியுங்கள்.

விருச்சிகம்
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய நல்ல மாதமாக இருக்கிறது. உழைப்பால் உயர கூடிய அமைப்பாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் வெற்றி வாகை சூடும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான உயர்வு அனுகூல பலன்களை கொடுக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய நிர்வாகத் திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமையில் இடையூறு ஏற்படாமல் அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டு. பரிகாரமாக கந்தனை நினைத்து கந்த சஷ்டி படியுங்கள் குழப்பம் தீரும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முழுவதும் உங்களுடைய முகத்தில் ஒரு புதுப் பொலிவு ஏற்படப் போகிறது. இதுவரை மன உளைச்சலில் இருந்து வந்த நீங்கள் அதிலிருந்து விடுபட இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. புதிய தொழில் துவங்கும் எண்ணம் அனுகூல பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் புதிய வாய்ப்புகளை தட்டிப் பறிக்கப் படும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கத்தை குறைத்தால் பிரிவினை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்து கொள்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் திடீர் விரயங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பரிகாரமாக பசுக்களுக்கு பச்சரிசி தானம் செய்யுங்கள்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் இருக்காது. தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான மாதமாக இருப்பதால் நீங்கள் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்து வந்த வேலைகளும் மடமடவென முடிய துவங்கும். பொருளாதார ரீதியான உயர்வு குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு பெறுவது அவசியமாகும். எந்த ஒரு விஷயத்திலும் குறுக்கு வழியில் சென்றால் வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்வீர்கள் எனவே கவனம் தேவை. தம்பதியருக்குள் ஒற்றுமை நீடிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்தி உண்டு. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. பரிகாரமாக வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் நீங்கள் உங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது. எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் துணிச்சலுடன் முன்னேற்ற பாதையை நோக்கி பயணிப்பார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் குறைந்து ஆரோக்கியமான செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உருவாகத் துவங்கும். சக பணியாளர்களை அரவணைத்து செல்வது நல்லது. பிள்ளைகளுடைய படிப்பில் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தை அலட்சியம் இல்லாமல் இருப்பது நல்லது. பரிகாரமாக கோவிலுக்கு நெய் தானம் செய்வது நல்லது.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் நல்லதொரு முன்னேற்றமான மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் தேய்ந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொலைதூர சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வியாபார விருத்தி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற முன்கோபமும், அவசரமும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் நிதானம் தேவை. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் சீராக இருக்கும். மாணவர்களுக்கு தங்களுடைய திறமையை நிரூபிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிறு சிறு பாதிப்புகள் மறையும். பரிகாரமாக திங்கட்கிழமையில் சிவ விரதம் இருப்பது நல்லது.

- Advertisement -