விதவிதமான சட்னி வகைகளில் இந்த கடலைப்பருப்பு ரொம்பவே வித்தியாசமான சுவையை கொடுக்கக் கூடியது. காலையில் எழுந்ததும் என்னடா சமைப்பது? என்று யோசிப்பது ஒரு புறம் என்றாலும், அதற்கு தொட்டுக்க என்ன சட்னி செய்வது? என்று சிந்திப்பது தான் கடினமாக இருக்கும். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த டேஸ்டியான கடலை பருப்பு சட்னி எப்படி செய்வது? என்று நீங்களும் தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிஞ்சுக்கோங்க, இனி அடிக்கடி இதைத்தான் செய்யப் போறீங்க!
கடலை பருப்பு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, கடலை பருப்பு – ரெண்டு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 10, உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் – அரை கப், தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்.
கடலை பருப்பு சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் கடலை பருப்பு சட்னி செய்வதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு வாணலியை அடுப்பில் வைத்து காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீதம் இருக்கும் எண்ணெயில் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். புளியுடன் சேர்த்து 10 வர மிளகாய்களை காரத்திற்கு ஏற்ப காம்புகளை நீக்கி சேர்த்து லேசாக மிளகாய் உப்பி வர வறுத்துக் கொள்ளுங்கள்.
மிளகாய் மற்றும் புளி கருகி விடக்கூடாது எனவே மெதுவாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த பொருட்களை எல்லாம் நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கடலை பருப்புடன் மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். புளியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒன்றும் பாதியுமாக கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து எடுத்ததும் மூடியை திறந்து அதில் வறுத்து வைத்துள்ள புளி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைசாக கெட்டியாக துவையல் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இதற்கு அடுப்பில் அதே வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
தோசைக்கு பக்காவான மசால் இப்படித்தான் செய்யணும். மசால் தோசை பிரியர்களா நீங்க. இந்த ரெசிபி உங்களுக்காக.
கடைசியாக கால் ஸ்பூன் அளவிற்கு பெருங்காயத்தூள் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தாளிப்பை கடலைப்பருப்பு சட்னியுடன் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே சூப்பராக கெட்டியான இந்த கடலைப்பருப்பு சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் துவையலாக வெரைட்டி ரைஸ் மற்றும் சாதத்துடனும் தொட்டுக் கொள்ளலாம். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் இந்த ரெசிபி ரொம்பவே பிடித்து போய்விடும்.