அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற ஆடி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு பருப்பு பாயாசம் இப்படி செய்து நிவேதியம் பண்ணுங்க. பால் பிடிக்காதவர்களுக்கு, பால் சேர்க்காத பருப்பு பாயாசம் ரெசிபி.

payasam
- Advertisement -

நாளை ஆடி வெள்ளி. அம்பாளுக்கும் மகாலட்சுமிக்கு கட்டாயமாக ஏதாவது ஒரு நெய்வேதியம் நம்முடைய வீட்டில் செய்ய வேண்டும். நிறைய பேர் பால் சேர்த்த பாயாசம் செய்து நிவேதனமாக வைப்பார்கள். ஆனால் சில பேருக்கு பால் சேர்த்த பாயாசம் பிடிக்காது. சில பேருக்கு ஆரோக்கியத்திற்கு கூட ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பருப்பு சேர்த்து இப்படி ஒரு பாயாசத்தை மகாலட்சுமிக்கு செய்து வையுங்கள். பால் சேர்க்காத ருசியான பருப்பு பாயாசம் செய்வது எப்படி ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் பாசிப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு 4 டேபிள் ஸ்பூன், போட்டு இதை சிவக்க பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளவும். அடுத்து அதே கடாயில் பல்லு பல்லாக வெட்டிய தேங்காய் துருவல் தேங்காய் 4 டேபிள் ஸ்பூன் போட்டு லேசாக வருத்து இதையும் தனியாக எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுக்கவும். அதில் முதலில் வருத்த தேங்காய் பல்லை போட்டு, நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக வறுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, இதோடு ஏலக்காய் 4, முந்திரி பருப்பு 5, போட்டு ஒரு ஓட்டு ஓட்ட வேண்டும். கடலைப்பருப்பு பாசிப்பருப்பு இதெல்லாம் கொரகொரப்பாக அரைபட்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கும் இந்த பவுடரை கொட்டி கைவிடாமல் கலந்து வேக வைக்கவும். இது கொஞ்சம் திக்காகும். ஆகவே அடி பிடிக்காமல் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி பக்குவமாக கலந்து வேக விடுங்கள். சேர்த்து இருக்கக்கூடிய இந்த பருப்பு வகைகள் எல்லாம் நன்றாக வெந்து வந்தவுடன் வெல்லக் கரைசலை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

1/2 கப் அளவு வெல்லத்தை முதலிலேயே தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெல்ல தண்ணீரை இதில் சேர்த்து கலந்து பச்சை வாடை போக கொதிக்க வைக்க வேண்டும். வெல்லம் உங்களுக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ, தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும். வெல்லம் கொதித்துக் கொண்டே இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு இந்த நேரத்திற்குள் சென்றால், பண கஷ்டம் எல்லாம் தீரும், குடும்ப கஷ்டம் எல்லாம் தீரும் சந்தோஷம் பல மடங்கு பெருகும்.

இதற்குள் ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, போட்டு சிவக்க வறுத்து இதை அப்படியே கொதித்துக் கொண்டிருக்கும் பாயாசத்தில் ஊற்றி அடுப்பை அணைத்துவிட்டு மகாலட்சுமிக்கு அம்பாளுக்கும் நிவேதனமாக வைத்து விடுங்கள்.  அவ்வளவுதான் வெள்ளிக்கிழமை பால் சேர்க்காத பருப்பு பாயாசம் தயார். பூஜை முடிந்தவுடன் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்த பாயாசத்தை ருசித்து மகிழ்ச்சி அடையலாம். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்க நாளைக்கு இந்த பாயாசம் செய்யுங்க.

- Advertisement -