பஞ்சமி என்றாலே அது வாராகி அம்மனுக்கு உரிய தினமாகவே கருதப்படுகிறது. ஒரு மாதத்தில் வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என்று இரண்டு பஞ்சமிகள் வரும். நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய நன்மைகள் அனைத்தும் அதிகரிக்க வேண்டும் என்றால் வளர்பிறை பஞ்சமியில் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்றால் தேய்பிறை பஞ்சமி அன்று வழிபாடு செய்ய வேண்டும். அந்த முறையில் அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி நாளன்று வாராகி அம்மனை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி மாத தேய்பிறை பஞ்சமி என்பது வியாழக்கிழமை அன்று ஆரம்பித்து வெள்ளிக்கிழமை காலை 6:10 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் வாராகி அம்மனை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 10 மணிக்குள் வழிபடலாம். அதே சமயம் வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்திலும் வழிபடலாம். எப்பொழுதும் போல் வாராகி அம்மனை வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் வாராகி அம்மனுக்கு என்று ஒரு தீபத்தை இந்த முறையில் ஏற்றி வைத்தோம் என்றால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
எப்பொழுதும் நாம் பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனுக்கு எந்த முறையில் வழிபாடு செய்கிறோமோ அதே முறையில் வழிபாடு அனைத்தும் செய்து முடித்துவிட்டு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாம்பாளத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் புதிதாக வாங்கிய கல் உப்பிலிருந்து ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து கொட்டி பரப்பிக் கொள்ளுங்கள்.
அதற்கு நடுவே கஸ்தூரி மஞ்சளை போட்டு அதை வட்ட வடிவில் தடவிக் கொள்ள வேண்டும். இந்த கஸ்தூரி மஞ்சளுக்கு மேலே செம்பருத்தி இலை அல்லது வெற்றிலையை வைக்க வேண்டும். இதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கில் நெய் ஊற்றி மஞ்சள் நிற திரி போட்டு வாராகி அம்மனை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். அடுத்ததாக ஐந்து விரலி மஞ்சளை மாலையாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த மாலையை அந்த அகல் விளக்கிற்கு போட வேண்டும். இவ்வாறு போட்டு முடித்து விட்டு உங்களுடைய பிரச்சனைகள் என்னவோ அதை மனதார வாராகி அம்மனிடம் கூற வேண்டும். கடைசியாக கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை பூர்த்தி செய்து விட வேண்டும். இந்த உப்பு கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை சனிக்கிழமை அன்று தான் எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக எடுக்கக்கூடாது.
சனிக்கிழமை அன்று காலையிலேயே இந்த தாம்பாளத்தில் இருக்கக்கூடிய கல்லுப்பையும் மஞ்சள் தூளையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து அதில் போட்டு கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். வெற்றிலையை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த விரலி மஞ்சள் மாலையை எடுத்து சாமியாறையில் வைத்துக் கொள்ளலாம் அல்லது ஏதாவது ஒரு ரூபத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: பண வசியம் ஏற்பட சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்
இந்த முறையில் தேய்பிறை பஞ்சமி நாளன்று வாராகி அம்மனுக்கு இந்த தீபத்தை ஏற்றி நாம் வழிபடும் பொழுது தீராத கடன் பிரச்சினை தீர்வதற்குரிய பணவரவு ஏற்படும். மேலும் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.