மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு சமையலறையில் எந்த இடத்தில் இருக்க வேண்டும்? எப்படி இருந்தால் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும்?

salt cash

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பை விட கல் உப்பு மிகவும் நல்லது. கல் உப்பு மருத்துவ ரீதியாகவும் நமக்கு நிறையவே நன்மைகளை செய்யக்கூடியவை. ஆன்மீகத்தை பொறுத்தவரை கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதனை சரியான இடத்தில் வைப்பதன் மூலம் நமக்கு நல்ல பலன்கள் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். இப்படியாக கல் உப்பை நம்முடைய சமையலறையில் எந்த இடத்தில் வைத்து இருப்பது நன்மை தரும்? எந்த இடத்தில் வைத்து இருப்பது நன்மை அல்ல? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

salt

ஒரு வீட்டில் இல்லாமல் இருக்க கூடாத பொருட்கள் என்றால் அது ‘கல் உப்பு’ தான். காலப்போக்கில் பெரும்பாலான வீடுகளில் கல் உப்பு பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர். அதற்கு பதிலாக சாதாரண உப்பைப் பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் முந்தைய காலங்களில் கல்லுப்பு இல்லாத வீடுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு இந்த உப்பை அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். பாற்கடலில் வாசம் செய்யும் நாராயணர் மற்றும் மகாலட்சுமி உடைய அம்சமாக சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பு பார்க்கப்படுகிறது. எனவே இப்பொருளை நம்முடைய வீட்டில் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொண்டால் செல்வமானது நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் கல் உப்பு வாங்கி வந்து வீட்டில் நிரப்பிக் கொள்வது அதிர்ஷ்டம் தரும் என்பார்கள். கல் உப்பை பீங்கான் ஜாடியில் வைப்பது தான் மிகவும் நல்லது. அப்படி வைக்கும் பொழுது எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கல் உப்பை கரண்டியால் எடுத்துப் போடக் கூடாது. கைகளினால் எடுத்துப் போடுவது தான் மிகவும் நல்லது. ஐந்து விரல்களையும் தொட்டு எடுத்து சமையலுக்கும் கல் உப்பை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் உண்டாகும்.

salt1

உங்களுடைய சமையலறையில் இருக்கும் அடுப்பு மேற்கு நோக்கிய திசையிலும் நீங்கள் கிழக்கு நோக்கிய திசையில் நின்றும் சமைக்கும் அமைப்பு இருந்தால் உங்களுக்கு வலது கை பக்கமாக மூலையில் கல் உப்பை வைத்து கொள்ளலாம். இந்த ஜாடியை சுவற்றை ஒட்டியபடி வைக்கக்கூடாது! சற்று தள்ளியே அமைப்பது நலம் தரும். அதுபோல கல் உப்பிற்கு அருகில் வெள்ளிக் கிழமையில் தீபம் ஏற்றி 5 ரூபாய் நாணயத்தை உள்ளே போட வேண்டும். இதனால் லக்ஷ்மி அருள் கிடைக்குமாம்.

மேலும் கல் உப்பை நம்முடைய உயரத்திற்கு கீழாக இருப்பதை விட, நம் உயரத்திற்கு ஒரு அடி மேலே இருப்பது அதிர்ஷ்டம் தரும் என்பார்கள். உங்கள் வீட்டில் சமையல் அறையின் செல்ஃப்களில் பெரிய அளவிலான ஜாடியில் போட்டு வைத்து அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்தும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வீட்டில் செல்வம் பெருகும், தங்கம் மளமளவென அதிகரிக்கும் என்கிறது சாஸ்திரம்.

uppu jaadi

ஆகவே இம்முறையில் அமைப்பு இல்லாவிட்டால் உங்களுடைய உயரத்திற்கு மேலே செல்ஃப்களில் வைத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோல் கல் உப்பை ஒரு பொழுதும் எவர்சில்வர் பாத்திரத்தில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்கக்கூடாது. இது வீட்டில் தரித்திரத்தை ஏற்படுத்தும். மேலும் எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்தால் துருப்பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதற்காகவே விற்கப்படும் பீங்கான் ஜாடிகளில் வைத்துக் கொள்வது நல்லது.