இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த பிரியாணியை தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த மஸ்ரூம் பிரியாணி. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் மஸ்ரூம் பிரியாணியை குக்கரில் கொஞ்சம் கூட குழையாமல் எப்படி சமைப்பது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி ரைஸ் – 2 கப் , மஸ்ரூம் – 400 கிராம், பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 2, பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் , மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் , உப்பு -1/2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், தயிர் – 3 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், சீரகம் -1/2 டீஸ்பூன், லவங்கம் – 2, பட்டை – 2, பிரியாணி இலை – 2, ஏலக்காய் – 4, எலுமிச்சை பழம் – பாதி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி -1 கைப்பிடி.
செய்முறை
இந்த பிரியாணி செய்ய முதலில் பாஸ்மதி அரிசியை ஒரு முறை கழுவி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது பிரியாணியை தாளித்து விடலாம். அடுப்பில் குக்கர் வைத்து சூடானவுடன் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி காய்ந்த பிறகு சோம்பு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை அனைத்தையும் சேர்த்து பொறிந்த பிறகு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இதை வதக்கிய பிறகு பச்சை மிளகாய், தக்காளி இரண்டையும் ஒன்றாக சேர்த்த பின் இவை வதங்க கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி குழைவாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் (இந்த இடத்தில் உங்களுக்கு கரம் மசாலா, பிரியாணி தூள் இல்லை உங்கள் வீட்டில் பிரியாணி மசாலா அரைத்து இருந்தால் ஏதேனும் ஒன்றை கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள் சுவை நன்றாக இருக்கும்).
இவையெல்லாம் சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு தயிர் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த விடுங்கள். இதன் பிறகு சுத்தம் செய்து வைத்த மஷ்ரூமை இதில் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது ஊற வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாஸ்மதி அரிசியை சேர்த்த பிறகு அது நன்றாக கொதி வரும் சமயத்தில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு ஒரு முறை கலந்து குக்கரை தம் போட்டு மூடி இந்த பிரியாணியை வேக வைக்க வேண்டும். அதற்கு தோசை கல்லை நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு குக்கர் சரியாக மூடும் அளவிற்கு ஒரு தட்டை போட்டு மூடிய பிறகு அதன் மேல் சுடு தண்ணிர் பாத்திரத்தை வைத்து விடுங்கள். இப்படியே பத்து நிமிடம் வேக விடுங்கள். அதன் பிறகு ஒரு முறை நன்றாக கலந்து விட வேண்டும்.
இந்த சமயத்தில் நாம் எடுத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா அனைத்தையும் சேர்த்து மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றிய பிறகு மறுபடியும் மூடி வேக விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் இந்த கருவேப்பிலை, புதினா, நெய் பிளேவர் அனைத்தும் கடைசியாக சேர்ந்து இந்த பிரியாணிக்கு நல்ல ஒரு மணத்தையும் ருசியும் தரும். அதன் பிறகு மேலும் ஐந்து நிமிடம் வேக வைத்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: எண்ணெய் குடிக்காத மொறுமொறுன்னு சுவையான முறுக்கு 10 நிமிடத்தில் வீட்டில் செய்ய இந்த 4 பொருள் இருந்தா போதுமே!
இந்த முறையில் செய்தால் குக்கரில் கூட கொஞ்சம் கூட குறையாமல் உதிரி உதிரியாக அருமையான பிரியாணியை செய்து விடலாம். நீங்களும் ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.