- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகலசம் வைக்காமல் வரலட்சுமி நோன்பு இருக்கும் முறை

கலசம் வைக்காமல் வரலட்சுமி நோன்பு இருக்கும் முறை

- Advertisement -

ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ஆடி மாதம் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளில் வரலட்சுமி விரதம் வருகிறது. அன்றைய நாளில் பலரும் வரலட்சுமி தாயாரை கலசமாக ஆவாகனம் செய்து வீட்டிற்குள் அழைத்து வந்து சுமங்கலி பூஜை செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அப்படி செய்பவர்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் கலசம் வைத்து வரலட்சுமி நோன்பை மேற்கொண்டு சுமங்கலி பூஜை செய்வார்கள். புதிதாக வரலட்சுமி விரதத்தை இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் கலசம் வைக்காமல் எளிமையான முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும் பின்பற்ற வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கலசம் வைக்காமல் நோன்பு

சுமங்கலி பெண்களுக்கு உரிய நாளாக தான் வரலட்சுமி விரதம் திகழ்கிறது. அன்றைய நாளில் விரதம் இருந்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரத்தை அருள்வாள் என்பதால்தான் அவளை வரலட்சுமி என்று கூறுகிறோம். அன்றைய நாளில் முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை எளிமையான முறையில் வழிபாடு செய்வதற்குரிய ஒரு வழிமுறையை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். இந்த வழிமுறையை பின்பற்றுபவர்களுக்கு கலசம் வைத்து வழிபாடு செய்த பலனும் கிடைக்கும்.

- Advertisement -

முதலில் இந்த வழிபாட்டை செய்வதற்கு உகந்த நேரமாக காலை 9:15 மணியிலிருந்து 10:15 மணி திகழ்கிறது. ஒருவேளை அந்த நேரத்தில் வழிபாடு செய்ய இயலவில்லை என்பவர்கள் காலை 6 மணியிலிருந்து 7:15 மணிக்குள் இந்த வரலட்சுமி விரத வழிபாட்டை மேற்கொள்ளலாம். கலசம் வைப்பவர்கள் அவர்கள் எப்பொழுதும் செய்யக்கூடிய வழிமுறையை பின்பற்றி கலசத்தை வைப்பார்கள். கலசம் வைக்காமல் புதிதாக வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

வீட்டு பூஜை அறையில் சுத்தமாக ஒரு மனைப் பலகையை வைத்து அதில் மஞ்சள் தடவி அதில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டுக்கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாரின் போட்டோவை சுத்தம் செய்து சந்தன குங்குமம் வைத்து அந்த போட்டோவை வீட்டு நிலை வாசலுக்கு கொண்டு போய் வரலட்சுமி தாயே வருக வருக என்று மனதார வரலட்சுமி தாயாரை வரவேற்க வேண்டும். பிறகு அந்த மகாலட்சுமி போட்டோவை வீட்டு பூஜை அறையில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மனைப்பலகையின் மீது வைக்க வேண்டும்.

- Advertisement -

அதற்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதில் பச்சரிசி, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், பச்சை கற்பூரம், மாவிலை, வேப்ப இலை போன்ற அனைத்து பொருட்களையும் வைக்க வேண்டும். கலசம் வைப்பவர்கள் இந்த பொருட்களை தான் கலசத்திற்குள் வைத்து மகாலட்சுமி தாயாரை ஆவாகனம் செய்வார்கள். அதனால் அந்த பொருட்களை நாம் கலசத்தில் வைக்காமல் இப்படி வாழை இலையில் வைத்து வழிபாடு செய்யப் போகிறோம். நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல், கற்கண்டை வைத்து தயார் செய்யக்கூடிய இனிப்பு பொருட்கள் போன்றவற்றை வைக்க வேண்டும்.

நமக்கு தெரிந்த மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளை கூறி மல்லிகை பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். அதேபோல் சுமங்கலி பெண்களுக்கு தர வேண்டிய மாங்கல்ய செட்டு ஐந்து அல்லது ஏழு என்ற எண்ணிக்கையில் வைத்து இந்த வழிபாட்டை செய்துவிட்டு அந்த சுமங்கலி செட்டை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு சென்று அங்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களிடம் கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வரலட்சுமி விரதத்தன்று கூற வேண்டிய மந்திரம்

மிகவும் எளிமையான முறையில் இப்படி வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருளால் அவர்கள் வேண்டிய வரம் கிடைப்பதோடு கலசம் வைத்து வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்