கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவதற்கு தனித்தன்மை வேண்டும். எல்லோராலும் கல்வியிலும், கலைகளிலும் சிறந்து விளங்கி விட முடியும் ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இடையூறுகளும், பிரச்சனைகளும் இருக்கும். கல்வியில் பின்தங்கி இருக்கும் மாணவர்கள், தங்கள் கல்வி நிலையை உயர்த்த, நன்கு படிக்க யாரை? எப்படி வழிபடலாம்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
கல்வி கடவுளாக இருக்கக் கூடியவர் சரஸ்வதி என்பது அனைவரும் அறிந்ததே! சரஸ்வதி தேவிக்கே குருவாக இருப்பவர் யார் தெரியுமா? கல்வியில் ஒருவர் சிறந்து விளங்க எந்த கிரகத்தினுடைய அருள் வேண்டும் தெரியுமா? எவ்வளவுதான் படித்தாலும் படித்தது மண்டையில் ஏறவே மாட்டேன் என்கிறது என்று ஒரு சாரர் புலம்ப கேட்டிருப்போம். மற்றொரு சாரர் படித்தது அத்தனையும் தேர்வு எழுதும் பொழுது என்னவோ மறந்து போய் விடுகிறது என்பார்கள்.
கல்வி, கலை மற்றும் தொழில் யாவும் ஒருவருக்கு வெற்றியை கொடுக்க, அதில் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஈடுபாட்டை கொடுக்கக் கூடியவர் புதன் பகவான். படிக்க சொன்னார்கள் என்று கடமைக்கே என்று படித்தால் எப்படி மண்டைக்கு ஏறும்? எதற்காக படிக்கிறோம்? படிக்கும் கேள்வியானது நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறது? என்பதை உணர்ந்து, தெளிந்து படிக்க கூடிய ஆற்றலை புதன் பகவான் கொடுக்கிறார்.
இந்த புதன் பகவானுடைய அருளை பெறுவதற்கு புதன்கிழமை தோறும் நவகிரக சன்னதிக்கு சென்று புத பகவானை மனதார பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் பச்சை நிற வஸ்திரம் ஒன்றை சாற்றிவிட்டு, அகல் விளக்கில் பச்சைத் திரி போட்டு தீபம் ஏற்றி வழிபடுங்கள். என்னதான் புரிந்து படித்தாலும், படித்தது எதுவும் தேர்வு எழுதும் பொழுது ஞாபகத்தில் இல்லாமல் போய் விடுகிறது. பயமும், பதற்றமும் தொற்றிக் கொண்டு படித்த பதிலை மறக்கடிக்க செய்து விடுகிறது என்பவர்கள் ஹயக்ரீவரை வழிபடுங்கள். ஹயக்ரீவர் சரஸ்வதி தேவிக்கு குருவாக விளங்குபவர்.
குதிரை முகம் கொண்ட மது கைடபன் என்னும் அசுரர்கள் பேராசை கொண்டு பிரம்ம தேவரிடமிருந்து வேதங்களை எல்லாம் திருடி வந்து பாதாள லோகத்தில் வைத்த போது, பிரம்மன் திருமாலிடம் சென்று முறையிடவே, அவர் குதிரை முகம் கொண்டு மனித உடம்புடன் அவர்களைப் போலவே அவதரித்து பாதாள லோகத்திற்கு சென்று போர் புரிந்து வேதங்களை காப்பாற்றியவர். கல்வி, கலை, தொழில் அத்தனையும் முடங்கிய அந்த சூழ்நிலையில் யாவற்றையும் மீட்டெடுத்து அருள் கொடுத்தவர்.
இதையும் படிக்கலாமே:
வங்கி கணக்கை துவங்க நல்ல நாள்
ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்கு கல்வி, கலை, தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வீட்டில் வழிபட வேண்டும் என்றால் விநாயகரை வழிபடுங்கள். ஞானம் தரக் கூடிய விநாயகர் படத்தை வைத்து 27 பச்சை ஏலக்காய்களை மாலையாக கோர்த்து, விநாயகருக்கு போட்டு “ஓம் கணேசாய நமஹ” என்னும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி மனதார பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், படித்தது மறந்து போகக் கூடாது, பெற்றோரின் பெயரை காப்பாற்ற வேண்டும், தொழிலில் சிறந்து விளங்க வேண்டும், நான் கற்கும் கலைகளில் சிறந்த மாணவனாக வேண்டும் என்று உங்கள் கோரிக்கைகளை முன் வைத்து வழிபட்டு வாருங்கள்.