இப்படி ஒரு முறை ரசப்பொடி செஞ்சு பாருங்க! இதில் ரசம் வச்சா கல்யாண வீட்டு ரசம் போல சுவையும், மணமும் ஆளையே தூக்கும்!

rasa-podi-rasam
- Advertisement -

கல்யாண வீட்டு ரசம் போல அலாதியான சுவையில் சப்புக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு இருக்கக்கூடிய இந்த ரசப்பொடியை இதே அளவுகளில் ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு எப்பொழுதும் இப்படியே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். ரசம் என்றால் அதற்கு இந்த ரசப்பொடி தான் மிகவும் முக்கியம். அவசரத்திற்கு ரசப்பொடி அரைத்து ரசம் வைக்க முடியாதவர்கள், இது போல மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டால் ஐந்தே நிமிடத்தில் சட்டென சூப் போல சூப்பரான ரசத்தை வைத்து வேலையை முடித்து விடலாம். பாட்டி காலத்து கைப்பக்குவத்தில் சுவையான ரசப்பொடி அரைக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

rasa-podi2

ரசப் பொடிக்கு தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 200 கிராம், மிளகு – 75 கிராம், சீரகம் – 75 கிராம், தனியா – 30 கிராம், வர மிளகாய் – 15, மஞ்சள் தூள் – 4 டீஸ்பூன், காய்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவிற்கு, பெருங்காயத் தூள் – 10 கிராம்.

- Advertisement -

ரசப்பொடி செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலியை வைத்து கொண்டு. அதன் பக்கத்திலேயே ஒரு பெரிய எவர்சில்வர் தாம்பூலத் தட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பொருளாக வறுத்த பின்பு அதில் கொட்டி ஆற விடுவதற்கு சரியாக இருக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் மஞ்சள் தூளை தவிர மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

rasa-podi

முதலில் துவரம் பருப்பை வெறும் வாணலியில் சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும். பருப்பின் வறுத்த மணம் வரும் வரை பொன்னிறமாக வறுத்த பின்பு தாம்புல தட்டில் கொட்டி ஆற விடுங்கள். பின்னர் அதே வாணலியில் மிளகு சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். மிளகு அதிகம் வறுபட்டு விட்டால் ரசம் கசக்கும் எனவே மிளகு வறுக்கும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சடசடவென சத்தம் வரும் வரை லேசாக ரெண்டு வதக்கு வதக்கினால் போதும். பின்னர் அதையும் தாம்பூல தட்டில் கொட்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் வாணலியில் பச்சை கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள். கறிவேப்பிலை மொறுமொறுவென்று சத்தம் வரும் வரை இரண்டு பிரட்டு பிரட்டி வறுக்க வேண்டும். ஏற்கனவே உங்களிடம் காய்ந்த கறிவேப்பிலை இருந்தால் ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொண்டால் போதும். கறிவேப்பிலை தண்ணீரில் கழுவி சேர்த்தால் கூட பரவாயில்லை, நீங்கள் வறுக்கும் பொழுது தண்ணீர் வற்றி மொறுமொறுவென மாறிவிடும்.

rasa-podi0

பின்னர் சீரகம் சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வதக்கி சேர்த்தால் போதும். பின்னர் தனியா விதைகளை சேர்த்து லேசாக மணம் வரும் வரை வறுக்க வேண்டும். தனியா சேர்த்தால் ரசத்தின் மணம் கூடுதலாக இருக்கும். ரசம் சூப் போல சூப்பரான சுவையில் இருக்க இந்த தனியா சேர்ப்பது சிறப்பு. பின்னர் வர மிளகாய் சேர்த்து 2 நிமிடம் லேசாக வதக்கினால் போதும், மிளகாய் கொஞ்சம் கூட தீய்ந்து கருப்பாகி விடக்கூடாது, எனவே அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வதக்கினால் போதும். பின்னர் இறுதியாக அடுப்பை அனைத்து விட்டு வாணலியை கொஞ்சம் ஆறவிட்டு பெருங்காயத்தூள் போட்டு 1 நிமிடம் லேசாக வதக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

rasa-podi1

இவற்றுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு ஆற விட்டு பின்னர் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க! ஒருமுறை செய்து ஏர் டைட் கண்டைனர் டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்து விட்டால் போதும், தேவையான பொழுது சட்டென ரசத்தை செய்து அசத்தி விடலாம். இந்த பொடியை வைத்து நீங்கள் ரசம் செய்தால் அசல் கல்யாண வீட்டு ரசம் போல ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

- Advertisement -