இன்று அரிசியையும் கோதுமையையும் தொடர்ந்து சாப்பிடும் நாம் சிறுதானிய வகைகளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சிறுதானியங்களின் வரிசையில் கம்பும் ஒன்று. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பெற, உடல் எடையை குறைக்க, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க, நார்ச் சத்து அதிகரிக்க, இளமையான தோற்றத்தைப் பெற, பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் வரும் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற, நம்முடைய உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க, இன்னும் பல நன்மைகளை உள்ளடக்கிய ஒரு சிறுதானியம் என்றால் அதில் இந்த கம்புக்கு முதலிடம் உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.

இத்தனை அருமை பெருமைகளை கொண்ட கம்பை வாரத்தில் ஒரு நாளாவது நாம் சாப்பிட வேண்டாமா? சரி, கம்பு மாவை வைத்து இன்ஸ்டன்ட் ஆக பத்து நிமிடத்தில் அட்டகாசமான சூப்பரான ஒரு தோசை ரெசிப்பி உங்களுக்காக.
முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கம்பு மாவு – 1 கப் (75 கிராம்), கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன், பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், தேவையான அளவு உப்பு, தயிர் – 2 டேபிள்ஸ்பூன், இந்த பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக கலந்து விட்டு அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து தோசை மாவு பதத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாவை அப்படியே எப்போதும்போல அரிசி மாவு தோசை போல, தோசைக்கல்லில் மொறுமொறுவென வார்த்து நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சிவக்க வைத்து சுட சுட கார சட்னியோடு பரிமாறினால் சுவையாக இருக்கும்.
இதே மாவை ரவா தோசை போல வெங்காயம் போட்டு பச்சை மிளகாய் போட்டு, ஓட்டை ஓட்டையாக மொறுமொறுப்பாக வார்த்தும் சாப்பிடலாம். அது எப்படி என்றால், இதே மாவில் இன்னும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ரவா தோசைக்கு மாவு கரைப்பது போல், கரைத்து கொள்ள வேண்டும். அந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு இந்த மாவை தோசைக்கல்லில் பரவலாக ஆங்காங்கே ரவா தோசை போலவே ஊற்றினால், அப்படியே ஓட்டை ஓட்டையாக வரும்.

தோசைக்கு மேலே தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் மொறுமொறுவென சிவக்க வைத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறிக் கொள்ளலாம். அவ்வளவு தான். ரொம்ப ரொம்ப ஈசியா செய்யக்கூடிய ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் தயார்.

இந்த தோசை மாவில் நமக்கு தயிர் ஊற்ற பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயிரை ஊற்றாமல் மற்ற பொருட்களை எல்லாம் சேர்த்து கரைத்து வைத்து, 2 மணி நேரம் புளிக்க வைத்தும் இந்த தோசையை சுட்டு கொள்ளலாம். கோதுமை மாவு, பச்சரிசி மாவு, உங்கள் வீட்டில் எதுவுமே இல்லை என்றாலும் கவலையே வேண்டாம். பிரிட்ஜில் தோசை மாவு இட்லி மாவு ஏதாவது இருக்கும் அல்லவா, அதிலிருந்து 2 குழிக்கரண்டி எடுத்து இந்த கம்பு மாவில் ஊற்றி கலந்து தோசை வார்த்து கொள்ளலாம். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.