சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். இந்த ரெசிபியும் ஆரோக்கியம் நிறைந்த உணவு தானே, இதில் ருசி கம்மியா இருக்குமா? என்று கேட்காதீங்க. இதோட ருசி நல்லாதாகங்க இருக்கும். ஆனா பீட்சா மாதிரி ருசி இருக்காதுங்க. வாங்க ரெசிபியை பார்ப்போம்.
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கம்பு மாவு – 1 1 கப், பொடியாக நறுக்கிய வர மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, வேர்க்கடலை – 4 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், முருங்கைக் கீரை – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் எல்லாப் பொருளையும் ஒன்றாக கலந்து விடுங்கள்.
அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து இந்த மாவை சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும். சப்பாத்தி மாவு போல ரொம்பவும் கெட்டியாக பிசைய கூடாது. அதை விட கொஞ்சம் தளதளவென பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். கையில் தொட்டால் மாவு ஒட்டக்கூடாது. மாவை கையில் எடுத்து தட்டும் அளவிற்கு மாவின் பதம் இருக்க வேண்டும். 5 நிமிடம் மாவை உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்தால் அடை மிருதுவாக கிடைக்கும். இப்போது அடை செய்வதற்கு மாவு தயார்.
ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த துணியை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து, சமையல் மேடையின் மேலே போட்டுக் கொள்ளுங்கள். கம்பு மாவை சிறிய உருண்டையாக பிடித்து இந்த ஈரத் துணியின் மேலே வைத்து உங்கள் கையை கொண்டு மெல்லிசாக தட்ட வேண்டும். கையில் கொஞ்சம் ஈரத்தை தொட்டு தொட்டு அடையை தட்டினால் கையில் ஒட்டாமல் வரும். (உங்களுக்கு தேவையான அளவு மெல்லிசாக தட்டிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் வாழை இலை இருந்தால் அதில் கூட இந்த அடையை தட்டலாம்.)
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக எண்ணெய் தடவி காய விடுங்கள். தோசைக்கல் நன்றாக காய்ந்ததும் அடை தட்டி வைத்திருக்கும் துணியை அப்படியே தோசைக்கல்லில் போட்டு துணியை லேசாக எடுத்தால், அடை துணியில் ஒட்டாமல் கல்லில் வந்துவிடும். அவ்வளவு தான்.
மிதமான தீயில் அடையை தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் போதும். சூப்பரான கம்பு அடை தயார். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி இருந்தால் போதும். வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஆரோக்கியமான உணவை சேர்த்துக் கொள்ளுங்கள்.