கண் திருஷ்டி இருப்பதை அறிவது எப்படி? அதை எந்தெந்த விதங்களில் முறையாக நீக்கலாம்.

- Advertisement -

“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்ற ஒரு பழமொழி, பிறரது பொறாமை கொண்ட தீய பார்வை நம் மீது படும் பொழுது, நமக்கு என்னென்ன வகையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு அனுபவ பழமொழியாக இருக்கின்றது. கண்திருஷ்டி என்றால் என்ன? கண் திருஷ்டி நம்மை எப்படி பாதிக்கின்றது? கண் திருஷ்டி ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன? அந்தக் கண்திருஷ்டி தோஷங்களை எப்படி போக்குவது? என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஒரு நபர் தன்னை காட்டிலும் சிறந்த முறையில் இருக்கும் மற்றொரு நபரை பார்த்து ஏங்கி, மனதிற்குள்ளாகவே அவரின் மீது வெறுப்பை வளர்த்து, பொறாமை கொண்டு அவரைப் பார்க்கும் பார்வையானது கண் திருஷ்டி பார்வை என நமது முன்னோர்களால் வகைப்படுத்தப்பட்டது.

- Advertisement -

கண்திருஷ்டி பாதிப்பிற்குள்ளான நபர் அடிக்கடி உடல் மற்றும் மனச் சோர்வு கொள்வார். அந்த நபர் எடுக்கின்ற முயற்சிகளில் தொடர்ந்து தடை, தாமதங்கள் ஏற்படும். தொழிலில் நஷ்டம், வேலையிடத்தில் பிரச்சினை, வீட்டில் சண்டை சச்சரவுகள், உடல் நல பாதிப்பு, தனது உறவினர்கள் – நண்பர்களிடையே பகை போன்றவை ஏற்படும்.

புதிதாக ஆடை உடுத்தினால் அந்த ஆடை எதிர்பாராத விதத்தில் கிழிந்து போவது, தீப்பற்றிக் கொள்வது, மேலும் அந்த புதிய ஆடையில் நீக்க முடியாத கரைகள் ஏற்படுவது, அடிக்கடி எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றுவது, தேவையற்ற கவலை, தூக்கமின்மை, கெட்ட கனவுகள் போன்றவை கண் திருஷ்டி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஏற்படும்.

- Advertisement -

கண் திருஷ்டி கழிப்பதற்கு மிக சிறந்த நேரமாக இரவு, பகல் இரண்டும் கலவையாக இருக்கும் அந்தி வேளையே ஆகும். கண்திருஷ்டி பாதிப்புகளை நீக்கிக் கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு கண் திருஷ்டி கழிக்கும் சமயத்தில் திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி கழிப்பு கொள்ளும் நபரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும் என்பதை கருத்திற்கொள்ளவேண்டும். கண் திருஷ்டி கழிப்பவர், கடுகு, கல் உப்பு, 3 காய்ந்த சிகப்பு மிளகாய்களை ஒன்றாக சேர்த்து வலது கையில் வைத்துக் கொண்டு, திருஷ்டி கழிப்பு கொள்ளும் நபரை நன்றாக மூன்று முறை சுற்றி இப்பொருட்களை வீட்டில் விறகு அடுப்பு இருந்தால், அந்த நெருப்பில் போட்டு விட வேண்டும்.

ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமையில் மட்டுமே கிழக்கு திசை நோக்கி நின்றவாறு திருஷ்டி கழித்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் நபர்களால் திருஷ்டி ஏற்படுவதைத் தவிர்க்க உருளி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாசம் மிக்க பொருட்களை அதில் போட்டு, மிதக்க விட்டு வீட்டின் நிலை வாசப்படி வெளியே வைக்க வேண்டும். தினந்தோறும் பழைய பூக்களை எடுத்து வீசி, தண்ணீரை மாற்றி புதிய பூக்களை அந்த பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

வண்ண மீன்களை கூட கண் திருஷ்டியை போக்கும் ஒரு சாதனமாக பயன்படுத்தலாம். வீட்டிற்குள் நுழையும் நபர்களின் பார்வை முதலில் மீன் தொட்டியின் மீது படும் வகையில் வீட்டின் முன்புறம் அல்லது ஹால் அறையில் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் வண்ண மீன்கள் தொட்டியை வைக்க வேண்டும்.

தினமும் நீங்கள் குளிக்கின்ற நீரில் சிறிதளவு கல் உப்பு போட்டு நன்கு கலக்கி, அந்த நீரில் குளித்தால் கண் திருஷ்டி தோஷங்கள் நீங்கி, உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும்.

குழந்தைகளை கண்திருஷ்டி பாதித்துள்ளதாக நீங்கள் கருதினால், செம்புக் காசு அல்லது செம்பு காப்பை குழந்தைகளின் கையில் அணிவிக்க வேண்டும். மேலும் சிறு குழந்தைகளின் கால் கட்டை விரலின் நகத்தின் மீது கருப்பு மை வைப்பதால் எவ்வகையான திருஷ்டிகளும் அக்குழந்தைகளை தாக்காது.

திருஷ்டி தோஷம் நம் வீட்டை தாக்காமல் இருக்க வீட்டிற்கு முன்பு பூசணிக்காய், அரக்கர் உருவம் கொண்ட பொம்மைகளை வைப்பதை விட வாழை மரம் மற்றும் இன்னபிற செடிகளை வீட்டிற்கு முன்பாக நட்டு வளர்த்தால் உங்கள் வீட்டை பிறரின் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது.

- Advertisement -