சூரசம்காரனை வதம் செய்வதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீச்சுடர் தான் முருகப்பெருமானாக தோன்றினார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அந்த முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள் என்றும், பார்வதி தேவி இவர்கள் ஆறு பேரையும் ஒருவராக மாற்றினார் என்றும் புராணங்கள் கூறுகின்றது. அப்படிப்பட்ட முருகப்பெருமான் சூரசம்ஹாரனை வதம் செய்த நாளை தான் கந்தசஷ்டி என்று கூறுகிறோம். இந்த கந்த சஷ்டி விரதத்தை 6 நாட்கள் தொடர்ச்சியாக அனுஷ்டிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கந்த சஷ்டி ஆறு நாட்களும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
கந்த சஷ்டி தீப வழிபாடு
எந்த ஒரு தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்பவர்களாக இருப்பவர்கள் கண்டிப்பான முறையில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இந்த தீபத்தில் அனைத்து விதமான தெய்வங்களும் வீற்றிருக்கிறார்கள் என்று அர்த்தம். தீபம் ஏற்றாமல் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடும் பலன் தராது என்பது பலரும் அறிந்த உண்மையே. வெறும் தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து அதில் பலனை பெற்றவர்கள் பலரும் இருக்கிறார்கள். எந்தவித வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் மேற்கொள்ளாமல் முழு மனதோடு ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்து மனதார வழிபாடு செய்பவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று கூட கூறப்படுகிறது. அந்த வகையில் கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்க இயலாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தீபம் ஏற்று வழிபாடும் செய்யும் முறை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
கந்த சஷ்டி என்பது நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஆரம்பிக்கிறது. அன்றைய தினத்தில் விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது என்பது அதீத பலனை தரும். பலரும் பல விதங்களில் தங்களுடைய விரத முறைகளை அனுஷ்டிப்பார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான முறை தான் இந்த தீப வழிபாட்டு முறை.
இந்த தீப வழிபாட்டிற்கு நமக்கு புதிதாக வாங்கிய ஆறு அகல் விளக்குகள் வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜையில் இருக்கக்கூடிய முருகனின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு ஆறு இடங்களில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். மேலும் அவருக்கு அரளிப்பூ மாலை, மல்லிகை பூ மாலை என்று ஏதாவது ஒரு மாலையை சாற்றி ஒரு சுத்தமான தாம்பாளத்தில் ஆறு வெற்றிலைகளை வைத்து அதற்கு மேல் ஆறு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றி முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், முருகப் பெருமானின் திருநாமங்கள் போன்றவற்றை மனதார முருகப்பெருமானை நினைத்து கூற வேண்டும்.
இதே முறையில் மாலையிலும் பின்பற்ற வேண்டும்.ஒருமுறை புதிதாக அகல் விளக்கு வாங்கினால் போதும். ஆறு நாட்களும் அதே விளக்கை உபயோகப்படுத்தலாம். நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் தொடர்ந்து ஆறு நாட்களும் காலையிலும், மாலையிலும் ஆறு நெய் தீபங்களை முருகப்பெருமானுக்கு முன்பாக ஏற்றி வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அந்த தீபச்சுடரில் முருகன் எழுந்தருளி வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும் சங்கடங்களையும் நீக்கி சிறப்பான ஒளிமயமான எதிர்காலத்தை தருவார் என்றும் கூறப்படுகிறது. இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கும் ஆறு நெய் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:கந்த சஷ்டி வேல் வழிபாடு
இந்த எளிமையான தீப வழிபாட்டை வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து செய்யும்பொழுது அவர்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோ