நாளை 14/4/2022 சுபகிருது ஆண்டின் தமிழ் வருட பிறப்பின் பொழுது ‘கனி காணுதல்’ எப்படி வீட்டிலேயே எளிமையாக செய்வது?

tamil-new-year-images2
- Advertisement -

தமிழ் மரபின்படி சித்திரை மாதம் முதல் நாளன்று திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் எழுந்தது முதல் படுக்கச் செல்லும் வரை இறைவனுக்கு வழிபாடுகள் செய்து இவ்வாண்டு நல்லபடியாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம். முப்பத்தி ஆறாவது வருடமாக பிறக்க இருக்கும் சுபகிருது ஆண்டில் கனி காணுதல் என்னும் நிகழ்வு எப்படி வீட்டிலேயே எளிமையாக கடைபிடிப்பது? கனி காணுதல் என்றால் என்ன? என்பது போன்ற ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

சித்திரை திருநாள் விழாவின் முக்கிய அம்சமாக கருதப்படுவது கனி காணுதல் நிகழ்வு ஆகும். அதிகாலையிலேயே எழுந்து குடும்பத்தில் இருக்கும் பெண்கள் பூஜைக்குரிய ஏற்பாடுகளை செய்து கண்ணாடியில் கனிகளை காண வைப்பது ஒரு சாஸ்திரமாக கடைபிடிக்கப்படுகிறது. கண்ணாடியில் கனிகளை கண்டால் இவ்வாண்டு முழுவதும் கனியை போலவே இனிப்பான ஆண்டாக அமையும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

கனி காணுதல் சம்பிரதாயத்தை எப்படி வீட்டிலேயே எளிதாக கடைபிடிக்கலாம்? காலையிலேயே எழுந்து குளித்து முடித்து புதிய கண்ணாடி அல்லது உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு கண்ணாடியை பூஜை அறையில் வைக்க வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்வது போன்றவற்றை முந்தைய நாளே தயாராக இருக்க வேண்டும். அப்பொழுது தான் மறுநாள் காலையில் எழுந்ததும் இந்த பூஜையை சுலபமாக செய்ய முடியும்.

கண்ணாடிக்கு மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் முன்பு ஒரு பெரிய தாம்பூலத் தட்டை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் கண்டிப்பாக முக்கனிகள் இடம் பெற்றிருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என்று உங்களிடம் இருக்கும் பழ வகைகளை அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நவதானியங்கள், அரிசி, துவரம் பருப்பு, வெல்லம், கல் உப்பு ஆகியவற்றை தலை தட்டாமல் குவித்து உங்களிடம் இருக்கும் சிறு சிறு கிண்ணங்களில் தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மங்கல பொருட்களாக இருக்கும் வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகியவற்றை தனியாக வைக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் கிழங்கு, கண்ணாடி வளையல் ஆகியவற்றை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் சில்லறை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்து கொள்ளுங்கள். அன்னபூரணியின் சிலை வைத்திருப்பவர்கள் அதற்கு அரிசியால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு செம்பு அல்லது பித்தளை கலசத்தை அலங்கரித்து அதில் முழுவதுமாக தண்ணீரை நிரப்பி உதிரிப் பூக்களை தூவி கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் பச்சை கற்பூரத்தை சேர்க்கலாம்.

இந்த எல்லா பொருட்களும் அந்த கண்ணாடியில் தெரிய வேண்டும். அதன்படி நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நைவேத்தியம் படைக்க பருப்பு பாயாசம், சர்க்கரை பொங்கல் போன்ற உங்களுக்கு விருப்பமானவற்றை செய்து ருசி பார்க்காமல் படைக்க வேண்டும். குடும்பத்தில் மூத்தவராக இருக்கும் பெண் முதலில் அந்த கண்ணாடியில் கனிகளை தரிசனம் செய்ய வேண்டும். அதன் பின்பு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவராக கண்ணாடியில் கனிகளை கண்டு தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அனைவரும் கனிகளை கண்ட பின்பு தூப, தீப, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியவற்றுக்கு ஆரத்தி காண்பித்து கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள். பின்பு அனைவரும் குடும்பமாக நைவேத்திய பிரசாதத்தை எடுத்துக் கொண்டு இவ்வாண்டு வறுமை இல்லாமல் உலக மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ வேண்டும் என்று பொது நலத்துடன் வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -