ஜாதகங்களில் எந்த கிரக பெயர்ச்சி என்றாலும் மக்கள் அதிகம் பயப்படுவதில்லை. ஆனால், இந்த சனி கிரக பெயர்ச்சி என்றாலே பொதுவாக எல்லோருக்கும் ஒரு இனம் தெரியாத பயம் ஏற்படுகிறது. காரணம் சனி கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் அவர் இந்த பூமியில் வாழும் ஆயுட்காலத்தை குறிக்கும் கிரகமாக திகழ்வதால், தங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்கிற ரீதியில் பொதுவாக அனைவருக்கும் பயம் ஏற்படுவது இயல்பு. அந்த வகையில் இன்று நாம் கண்டக சனி என்றால் என்ன என்பதையும், இந்தக் காலத்தில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டிய கண்டக சனி பரிகாரம் ( Kantaka Sani Pariharam in Tamil ) குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக சனி பெயர்ச்சி என்பது ஒரு நபரின் ஜாதகத்தில் அவரின் ராசியை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் கண்டக சனி என்பது ஒரு நபரின் ஜாதக கட்டத்தில் அவரின் ஜென்ம ராசியிலிருந்து எண்ணி 7 ஆம் கட்டத்தில் சனி கிரகம் பெயர்ச்சி ஆகி இருந்தால், அது கண்டக சனி என கருதப்படுகிறது. கண்டக சனி காலத்தில் ஒரு நபர் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும். உதாரணமாக சிறப்பாக கல்வி பயின்று வந்த மாணவர்களின் ஜாதகத்தில் கண்டக சனி ஏற்பட்டால், அவர்களின் கல்வி கற்கும் திறன் பாதித்து, பள்ளி தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்து, படிப்பில் சுனக்க நிலை ஏற்படும்.
கண்டக சனி தாக்கம் குறைய பரிகாரம்
கண்டக சனி ஏற்பட்டிருக்கும் ஜாதகர் சனி பகவானால் பாதகமான பலன்கள் ஏதும் நடைபெறாமல் தவிர்க்க, கண்டக சனி நடைபெறும் காலம் முழுவதும் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானையும், அம்பாளையும் வழிபாடு செய்ய வேண்டும், குறிப்பாக சனிப்பிரதோஷங்களில் நந்தி தேவர், சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதாலும் கண்டக சனியால் பாதகமான பலன்கள் ஏற்படாமல் தடுக்கும்.
சனிக்கிழமைகள் தோறும் வீட்டில் இருக்கின்ற குடும்பத் தலைவர் மறைந்த முன்னோர்களை வழிபாடு செய்து, கருப்பு எள் கலந்த தயிர் சாதத்தை காகங்களுக்கு உணவாக வைத்த பின் உணவு உட்கொள்வதால் கண்டக சனி காலங்களில் விரும்பத்தகாத பலன்கள் ஏற்படாமல் காக்கும். சனிக்கிழமைகளில் வெளிர் நீல நிற ஆடைகளை அணிந்து கொள்வதால் சனி பகவானின் அனுக்கிரகம் கிடைக்கும்.
கண்டக சனி காலங்களில் தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், சூரிய பகவானை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு சூரிய பகவானுக்கு அர்ப்பணம் செய்வதாக மனதில் எண்ணி மூன்று சொட்டு நல்லெண்ணையை எடுத்து பூமியில் விட வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள்ளாக, உங்கள் வீட்டுக்கு அருகில் அரச மரம் இருக்கும் பட்சத்தில், அந்த மரத்தடியில் ஒரு இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வர வேண்டும்.
ராசி கற்களில் அமிதிஸ்ட் எனப்படும் ஒரு வகை கல் சனி கிரகத்திற்குரிய கல்லாக ராசிக்கல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே ஜாதகத்தில் கண்டக சனி ஏற்பட்டுள்ள காலங்களில் ஒரு கேரட் அளவிற்கு மேலான அமிதிஸ்ட் கல்லை வெள்ளி மோதிரத்தில் பதித்து, வலது கை நடு விரலில் அணிந்து கொள்ள வேண்டும். உடல் ஊனமுற்ற ஏழைகளுக்கு கருப்பு உளுந்து, கருப்பு எள் மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்வதாலும் கண்டக சனி காலங்களில் கெடுதலான பலன்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும்.