கொழுக்கட்டை என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை சாப்பிடக்கூடிய உணவு தான். ஆனால் அது இனிப்பு கொழுக்கட்டையாக இருக்க வேண்டும். இந்த கார கொழுக்கட்டை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது கிடையாது. இந்த முறையில் குட்டி குட்டியாக இந்த அம்மணி கொழுக்கட்டை பருப்பு எல்லாம் சேர்த்து அரைத்து அதில் சேர்த்து கொடுத்துப் பாருங்கள், குழந்தைகள் கட்டாயம் சாப்பிடுவார்கள். இந்த கொழுக்கட்டையை சிற்றுண்டிக்கு பதிலாக இதையே கூட சாப்பிட கொடுக்கலாம். இது வேக வைத்து சாப்பிடுஉணவு என்பதால் நல்ல ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. இந்தக் கொழுக்கட்டையை ஈஸியா செய்யறது எப்படின்னு பார்க்கலாமா.
தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – 1 கப், காய்ந்த தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன், கடுகு – 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, கடலைப்பருப்பு -1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன், பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன், உப்பு -1 டீஸ்பூன், கருவேப்பிலை-1 கொத்து, கொத்தமல்லி – 1கைப்பிடி.
இந்தக் கொழுக்கட்டை செய்வதற்கு மாவு பக்குவம் மிகவும் முக்கியம். இதற்கு பச்சரிசி வாங்கி கழுவி சுத்தம் செய்து ஆற வைத்து லேசான ஈரப்பதம் இருக்கும் போதே அரைத்து செய்தால் கொழுக்கட்டை எவ்வளவு நேரம் ஆனாலும் மெருதுவாகவும், சாப்பிட ருசியாகவும் இருக்கும். ஏற்கனவே அரைத்து வைத்த மாவு அல்லது ரெடிமேட் மாவு வாங்கி செய்தால் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் கல்லு மாதிரி மாறி விடும் ருசியாகவும் இருக்காது.
ஊற வைத்து காய வைத்த பச்சரிசி மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து ஒரு கப் மாவிற்கு ஒன்றரைக் கப்பளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடு படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் சூடானவுடன் அரை டீஸ்பூன் உப்பு, பச்சை மிளகாய் விழுது இரண்டையும் சேர்த்த பிறகு மாவை கொட்டி 5 நிமிடம் வரை கைவிடலாமல் கிளறி விடுங்கள். இந்த மாவை எடுத்து உருண்டை பிடித்தால் கையில் ஒட்டாமல் வர வேண்டும் அந்தப் பதம் வந்த பிறகு அடுப்பை அனைத்து விடுங்கள். மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போதே சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தது அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து சூடானவுடன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்த உடன் 5 காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, இவைகளை சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். அதன் பிறகு காய்ந்த தேங்காய்த் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள். (வீட்டில் இருக்கும் தேங்காய் சேர்ப்பதற்காக இருந்தால் தனியாக சிவக்க வறுத்து ஆற வைத்து அதன் பிறகு தான் சேர்க்க வேண்டும்). இத்துடன் பெருங்காயம், அரை டீஸ்பூன் உப்பு, மிளகாய் தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து லேசாக வறு த்துக் கொள்ளுங்கள். தேங்காய் சேர்த்த பிறகு அதிகம் வறுக்க கூடாது. இதை தட்டில் கொட்டி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசான கொரகொரப்புடன் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து நல்லெண்ணெய் ஊற்றி மீதம் இருக்கும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வேக வைத்த கொழுக்கட்டைகளையும் இதில் சேர்த்த பிறகு, அரைத்த பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடுங்கள்.
சுவையான அம்மணி கொழுக்கட்டை தயார் இது குட்டி குட்டியாக பார்க்க அழகாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறையில் நீங்களும் உங்கள் வீட்டில் இந்த அம்மிணி கொழுக்கட்டை செய்து பாருங்கள்.