செட்டிநாடு ஸ்டைலில் கார சீயம் செய்வது இவ்வளவு ஈசியா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே.

seyam
- Advertisement -

செட்டிநாடு ஸ்டைலில் சீயம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இதை ஒரு சிலர் மசாலா சீயம் என்றும் சொல்லுவார்கள். மிக மிக சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் ரேஷன் பச்சரிசியை வைத்து கூட இந்த சீயத்தை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி பரிமாறினாலும் சூப்பரா இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் இந்த சூப்பர் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் 1/2 கப் அளவு பச்சரிசி, 1/2 கப் அளவு உளுந்து இந்த இரண்டு பொருட்களையும் ஒரே பாத்திரத்தில் ஒன்றாக போட்டு சுத்தமாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி 2 லிருந்து 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களும் நன்றாக ஊறிய பின்பு, மிக்ஸியில் போட்டு இட்லிக்கு மாவு ஆட்டுவது போல நைசாக, கொஞ்சம் கட்டியாக மாவை அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த அரிசி உளுந்து மாவை எடுத்து தனியாக ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நமக்கு இட்லி மாவும் உளுந்து மாவும் சேர்த்து அரைத்துத் தயாராக உள்ளது. இதில் மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு அப்படியே கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடுகு – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – 2 கொத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு, இவைகளைப் போட்டு வதக்கி இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து மீண்டும் 2 முறை கலந்து விட்டு இந்த தாளிப்பை அப்படியே மாவில் கொட்டி கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவு, போண்டா மாவு போல கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி கரைத்து விடாதீர்கள். தயாராக இருக்கும் மாவை அப்படியே கையில் அள்ளி போண்டா போல எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வேகவைத்து எடுத்து பரிமாறினால் சூப்பரான மசாலா சீயம் தயார். இதை கார சீயம் என்றும் சொல்லிக்கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

இந்த சீயம் செய்யும் போது சில பேர் 1/2 கப் பச்சரிசிக்கு, 1/4 கப் உளுந்து சேர்த்து கூட செய்வார்கள். இந்த அளவுகளில் அரிசி பருப்பு சேர்த்தும் சீயம் செய்யலாம். ஆனால் கொஞ்சம் சாஃப்டாக வராது.

உளுந்து கொஞ்சம் அதிகமாக சேர்க்கும் போது, அதாவது சமபங்கு அரிசியையும் உளுந்தையும் சேர்க்கும் போது நமக்கு கொஞ்சம் சாஃப்டாக சீயம் கிடைக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா. மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -