இட்லி அரிசியில் செய்யக் கூடிய இந்த சூப்பரான கார சுகியன் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். எப்பொழுதும் சுகியன் என்றால் அது இனிப்பு வகையாக செய்யப்படுவது உண்டு. ஆனால் இது போல ஒரு முறை நீங்கள் கார சுகியன் செய்து கொடுத்துப் பாருங்க, எல்லோரும் இதற்கு அடிமையாகி விடுவாங்க! அந்த அளவிற்கு சூப்பராக இருக்கக் கூடிய இந்த கார சுகியன் எளிதாக எப்படி செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.
கார சுகியன் செய்ய தேவையான பொருட்கள்:
புழுங்கல் இட்லி அரிசி – இரண்டு கப், உளுத்தம் பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – எட்டு, உப்பு – தேவைக்கு ஏற்ப, கருவேப்பிலை – ஒரு கொத்து, கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய் பற்கள் – அரை கப், சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
கார சுகியன் செய்முறை விளக்கம்:
முதலில் கார சுகியன் செய்வதற்கு இட்லி அரிசியில் புழுங்கல் அரிசியாக பார்த்து எடுத்துக் கொள்ளவும். அதில் 2 கப் அளவிற்கு அளந்து எடுத்து நன்கு சுத்தமான தண்ணீரால் அலசி பின்பு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது 2 மணி நேரம் நன்கு ஊறி இருக்க வேண்டும். அதன் பிறகு ஊற வைத்த அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு, அரிசியை மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் சேர்த்து அதனுடன் காய்ந்த மிளகாய் தேவையான அளவிற்கு உப்பு போட்டு மை போல மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை இரவு நீங்கள் செய்தால், மறுநாள் காலையில் உளுந்து மற்றும் கடலை பருப்பை மேற்கூறிய அளவின் படி எடுத்து அலசி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் நன்கு ஊறிய பின்பு நுரைக்க பொங்கி வர ஆட்டி எடுக்க வேண்டும். இந்த உளுந்த மாவை அரிசி மாவுடன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஊறிய கடலை பருப்பை அவற்றுடன் சேர்க்க வேண்டும், அப்போது தான் ஆங்காங்கே கடலை பருப்பு வாய்க்கு கிடைக்கும். பின்னர் இதனுடன் பொடி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சிறிதளவு மற்றும் பற்கள் போல பல்லு பல்லாக கீறிய தேங்காய் கீற்றுகள் அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பை காய வைத்து ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். சுகியன் நல்லெண்ணெய் ஊற்றி செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். நல்லெண்ணெய் ஊற்றி சமைக்கும் பொழுது ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை போட்டு கொள்ளுங்கள். புளி நன்கு கருகிய பின்பு அதை எடுத்து விட வேண்டும். பிறகு நீங்கள் இந்த மாவை சிறு சிறு போண்டாக்களாக கைகளால் எடுத்து கிள்ளி கிள்ளி ஆங்காங்கே போட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
மணம் வீசும் மல்லிகை பூவை வைத்து மணக்க மணக்க காரசாரமான ரசம் வைக்கலாம் வாங்க.
பிறகு முழுவதுமாக எல்லா புறமும் சிவக்க வறுக்க மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொள்ளுங்கள். போண்டாக்கள் அனைத்தும் பொன்னிறமாக வெந்து வந்ததும் எடுத்து சுட சுட சட்னியுடன் பரிமாற வேண்டியதுதான்! ரொம்பவே சூப்பராக இருக்கும் இந்த கார சுகியன் ரெசிபி செய்வதும் சுலபம் தான். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, வீட்டில் இருக்கும் எல்லோரிடமும் பாராட்டுகள வாங்குங்க!