மணம் வீசும் மல்லிகை பூவை வைத்து மணக்க மணக்க காரசாரமான ரசம் வைக்கலாம் வாங்க .

- Advertisement -

பூ என்றதுமே முதலில் ஞாபகத்துக்கு வருவது அதன் வாசம், அடுத்தது அது தலையில் சூடி கொள்வது அதன் பிறகு கடவுளுக்கு சாற்றுவது இவை தான். ஆனால் இந்த மல்லிகை பூவை கொண்டு ரசம் வைக்கலாம் அப்படி என்றால் எப்படி? என்று யோசிக்க தோன்றுகிறது அல்லவா, இட்லியில் கூட மல்லிகை பூ போல இட்லி என்று சொல்லுவார்கள். அதைப் போல மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி ஒரு அடைமொழி வைத்து கூறுவார்களே தவிர மல்லிகை பூவை வைத்து செய்வது கிடையாது. மல்லிகைப் பூவில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உண்டு இது தெரிந்ததுதான் இருந்தாலும் இதை வைத்து எப்படி ரசம் செய்வது, அந்த ரசம் எப்படி இருக்கும் இப்படி எல்லாம் நம் மனதில் எண்ணங்கள் ஓடத்தான் செய்யும். ஆனால் இந்த மல்லிகை பூவை கொண்டு செய்யும் ரசமானது மருத்துவத்திற்காக மட்டுமின்றி இதன் சுவையும் அத்தனை பிரமாதமாக இருக்கும். இதில் அந்த மல்லிகைப் பூவின் வாசம் கொஞ்சம் கூட வரவே வராது. சரி வாருங்கள் இந்த மல்லிகை பூ ரசத்தை எப்படி செய்வது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

மல்லிகை பூ ரசம் வைக்க தேவையான பொருள்கள்: மல்லிகை பூ – 1 கைப்பிடி, மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1ஸ்பூன், பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 2, தக்காளி – 1, மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கருவேப்பிலை கொத்தமல்லி – 1 கைப்பிடி, பெருங்காயம் – 1 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், நெய் -1 டேபிள் ஸ்பூன், புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு இட்லி பானையை வைத்து இட்லி வேகவைப்பதைப் போல் நாம் ஒரு தட்டை வைத்து அதன் மேல் ஒரு வெள்ளை நிற காட்டன் துணியை போட்டு வைத்துக் கொள்வோம். அதன் பிறகு ஒரு கைப்பிடி அளவு மல்லிகை பூக்கள் கொஞ்சம் நல்ல மொட்டான மலர்களாக இருந்தால் நல்லது. விரிந்து வதங்கிய பூக்களில் அத்தனை மருத்துவ குணங்கள் இருக்காது. இதை மட்டும் கொஞ்சம் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் இந்த மல்லிகை பூவே அலசி ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் ஒரு டம்ளர் தண்ணீரும் ஊற்றி இட்லி பாத்திரத்தில் மேலுள்ள தட்டில் வைத்து இதற்கு மேலும் ஒரு வெள்ளை துணியை போட்டு மூடி ஆவியில் வேக விடுங்கள். இதற்கு மேல் போட துணையானது இதன் வாசத்தை வெளியே விடாமல் இருப்பதற்காக.

அடுத்ததாக ரசம் வைக்க நாம் மற்ற பொருட்களை தயார் செய்து கொள்வோம். புளியை கரைத்து வடிகட்டி புளி கரைச்சல் தண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு ,சீரகம், பூண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இடி உரலில் போட்டு லேசாக தட்டி புளி கரைச்சலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தக்காளியையும் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து உங்கள் கைகளாலே நன்றாக பிசைந்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எதையும் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டாம்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்கட்டும் இதற்குள் நீங்கள் ஆவியில் வைத்து மல்லிப்பூ வெந்திருக்கும். அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் மல்லிப்பூ போட்ட கிண்ணத்தில் உள்ள நீரை மட்டும் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு இதில் இறங்கி இருக்கும் பூ தண்ணீர் மட்டும் தான் தேவை, பூ தேவை இல்லை. இந்த தண்ணீரை தனியாக வைத்து விடுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை வைத்து அதில் நெய்யை விட்டு கடுகு போட்டு தாளித்து வர மிளகாயை கிள்ளி அதில் சேர்த்த பிறகு பெருங்காயத்தையும் சேர்த்து விடுங்கள். இதன் பிறகு நீங்கள் கரைத்து வைத்த ரசத்தை அதில் ஊற்றி பிறகு லேசாக பொங்கி நுரை வரும் வரை காத்திருங்கள். அப்படி நுரை வரும் போது இந்த மல்லிப்பூ தண்ணீரை அதில் சேர்த்து பிறகு மீண்டும் நுரை வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள்.

கடைசியாக இதன் மேலே கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி தட்டை மூடி வைத்து விடுங்கள். அவ்வளவுதான் மிகவும் எளிமையான அதே நேரத்தில் மருத்துவ குணம் நிறைந்த வித்தியாசமான ஒரு ரசம் தயார் செய்து விட்டோம்.

இதையும் படிக்கலாமே: அடடா கடலை மாவை வைத்து இப்படி ஒரு குருமா கூட வைக்கலாமா? வித்தியாசமான சுவையில் இந்த வெள்ளை குருமாவை யாரும் மிஸ் பண்ணாதீங்க. இட்லி தோசை சப்பாத்திக்கு வேற லெவல் சைட் டிஷ்.

இந்த ரசத்தை நீங்கள் சாப்பிட கொடுத்தால் ரசம் சுவை வித்தியாசமாக இருக்கிறது என்று கூறுவார்களே தவிர, இதில் நீங்கள் மல்லி பூ சேர்த்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவே செய்யாது. இதை வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் இந்த ரசத்தை கொடுக்கலாம். பொதுவாகவே ரசம் ஜீரண சக்திக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதில் மேலும் மருத்துவ குணங்கள் சேர்த்துக் கொடுக்கும் போது நமது ஆரோக்கியம் இன்னும் மேம்படும் இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -