வாழ்க்கையில் எந்த கஷ்டங்கள் வந்தாலும், அதற்கு காரணம் கர்ம வினை தான் என்று சொல்லுகிறார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் கர்மா எதன் மூலம் வருகிறது, நாம் செய்த கர்மா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு தான் வருகிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ஆன்மீகம் சொல்லும் சில விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கர்மா வர காரணம்
ஒரு மனிதனுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல் இந்த மூன்று விஷயத்திலிருந்து தான் கர்மா தொடங்குகிறது. அடுத்தவர்களைப் பற்றி கெட்டதாக எண்ணினாலே கெட்ட கர்மா வந்துவிடும். அடுத்தவர்களை மனம் நோகும்படி பேசினால் அதற்கு ஒரு கர்மா சேரும்.
நாம் செய்யக்கூடிய செயல்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்தால் அதற்கான கர்மா நம்மை வந்து சேரும். ஆக நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் சுத்தமாக இருக்கும் பட்சத்தில் நம்முடைய நல்ல கர்மா செயல்படும். சரி இந்த கர்மா நம்முடைய வாழ்க்கையில் குறைந்து கொண்டு தான் வருகிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது.
கர்மா குறைவதற்கான அறிகுறிகள்
முதல் விஷயம். உங்களுக்கு தீர்க்க முடியாத கஷ்டங்களும் துன்பங்களும் துயரங்களும் வரும். ஆனால் அந்த கஷ்டத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் துயரத்தில் இருந்தும் வெளி வருவதற்கு உண்டான வழிகளை அந்த கடவுள் உங்களுக்கு காண்பித்துக் கொண்டே இருப்பான். பெரிய அளவில் கஷ்டம் வருது. ஆனால் அந்த கஷ்டத்தை சமாளிப்பதற்கு நமக்கு தெளிவும் தெம்பும் இருக்கிறது எனும் பட்சத்தில் நம்முடைய கர்மா குறைந்து கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.
முன்பெல்லாம் கஷ்டம் வந்தால், கஷ்டத்திற்கு காரணம் அடுத்தவர்கள் தான் என்று பழி போடுவேன். ஆனால் காலம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்து விட்டது. ஒரு சில காலகட்டத்திற்கு பிறகு இந்த கஷ்டம் வந்ததற்கு நான் தான் காரணம். நான் செய்த கர்ம வினை தான் காரணம் என்று சகித்து, அந்த கஷ்டத்தை சுலபமாக கடந்து செல்கின்றேன் என்பவர்களுக்கும் கர்மா குறைந்து கொண்டே வருகிறது என்று அர்த்தம். சகிப்புத்தன்மை வந்துவிட்டாலே உங்களுக்கு கர்மா குறைய போகிறது, குறைந்து கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.
அடுத்து மனிதர்களைத் தாண்டி மற்ற உயிர்களிடத்திலும் உங்களுக்கு பாசம் அதிகமாக இருக்கும். ஈ எறும்புகளுக்கு கூட ஒரு துன்பத்தை கொடுக்க மாட்டீர்கள். பறவைகள் நாய்கள் வாயில்லா ஜீவன்களுக்கு எல்லாம் உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். இந்த மனப்பான்மை வந்து விட்டாலே உங்களுடைய கர்ம வினை குறைகிறது என்றுதான் அர்த்தம்.
ஒரு காலகட்டத்தில் தேவைக்கு அதிகமாக உங்களுக்கு ஆசை இருந்திருக்கும். செய்யும் வேலையில் திருப்தி இருக்காது. வரக்கூடிய வருமானத்தில் திருப்தி அறுக்காது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று பேராசையோடு சுற்றித்திரிந்து இருப்பீர்கள்.
ஆனால் ஒரு சில காலகட்டத்திற்குப் பிறகு தேவைக்கு ஏற்ப சம்பாதித்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரும். தேவைக்கு அதிகமாக இருக்கக்கூடிய பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்குள் தோன்றும். உங்களுடைய ஆசைகள் தானாக குறைய தொடக்கப் போது, கர்மா குறைகிறது என்று அர்த்தம்
வாழ்க்கையில் நீங்கள் இதற்கு முன்பாக செய்த தவறுகளை எல்லாம் எண்ணி வருத்தப்படுவீர்கள். பழைய ஞாபகங்கள் எல்லாம் உங்களுக்கு திரும்பவும் வரும். யாருக்கு எல்லாம் துரோகம் செய்திருக்கிறீர்கள் என்று நினைத்தீர்களோ, அவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்பீர்கள்.
இதையெல்லாம் தாண்டி நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்ற அந்த இறை உணர்வை நீங்கள் உணர்வீர்கள். எதுவுமே நம் கையில் இல்லை. எல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடல். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று உங்களுக்குள் ஒரு பக்குவம் வரத் தொடங்கி இருக்கும். அந்த பக்குவம் தான் காலம் உங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடமாக இருக்கும்.
மேல் சொன்ன அறிகுறிகள் எல்லாம் இயல்பாக ஒரு மனிதனுக்கு நடக்கக் கூடியதுதான். ஆனால் எல்லோருக்கும் அது சுலபமாக நடந்து விடாது. கர்மா குறையும் போது தான் இந்த எண்ணங்கள் எல்லாம் உங்களுக்கு தோன்றும் என்பது ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள்.
இதையும் படிக்கலாமே: 5-5-2024 ஆம் தேதி பண தேவையை பூர்த்தி செய்ய பரிகாரம்
நீங்க உங்களுடைய வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கி சென்று சிந்தித்துப் பாருங்கள். தற்போது வாழக்கூடிய நிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள் எப்படி இருக்கிறது என்று. உங்களுடைய கர்மா குறைகிறதா இல்லையா என்பதை நீங்களே கண்டுபிடித்து விடலாம்.