நாம் ஒவ்வொருவரும் இந்த ஜென்மத்தில் பிறப்பெடுத்ததற்கு முக்கியமான காரணமே நம்முடைய கர்ம வினைகள் தான். முன் ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல் தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறப்பெடுத்து கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கிறோம். அப்படிப்பட்ட கர்ம வினைகள் தீர்ந்தால்தான் அடுத்த ஜென்மம் என்பது ஏற்படாமல் இருக்கும். இந்த கர்ம வினைகளை தீர்ப்பதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் மிகவும் சிறப்பு மிகுந்த மாதமான மார்கழி மாதத்தில் ஒரு முறை மட்டுமாவது இந்த பரிகாரத்தை செய்தோம் என்றால் நம்முடைய கர்ம வினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கர்ம வினைகள் தீர பரிகாரம்
நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். அந்த கஷ்டத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காக பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்கிறோம். இந்த வழிபாடுகளும் பரிகாரங்களும் நம்முடைய கர்ம வினைகளை தீர்ப்பதற்கு உதவி புரியும். நம்முடைய கர்ம வினைகள் எப்பொழுது தீர்கிறதோ அப்பொழுதுதான் நம்முடைய கஷ்டமும் தீரும். அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகளை முற்றிலும் நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
கர்ம வினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு தான தர்மங்களை பிறருக்கு செய்ய வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கும். இந்த தான தர்மங்களை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பலரும் நம்மை அறியாமலேயே நம்மை தானம் செய்ய வைத்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பிரதிபலனை எதிர்பார்த்து நாம் செய்யக்கூடிய தானம் என்பது அந்த அளவிற்கு பலனை தராது என்றே கூற வேண்டும்.
மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய தானத்தால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக வாயற்ற ஜீவன்களுக்கு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலத்தில் மார்கழி மாதத்தில் வாசலில் கோலம் போடும் வழக்கம் வைத்திருப்பார்கள். அதுவும் சிறிய கோலமாக இருக்காது. பெரிய கோலமாக இருக்கும். அந்தக் கோலமும் பச்சரிசி மாவினால் தான் போடுவார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அந்த பச்சரிசி மாவை சாப்பிடுவதற்காக எறும்புகளும் குருவிகளும் வரும் என்பதுதான். இது நம்மை அறியாமலேயே நாம் செய்யக்கூடிய தானம். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி யாரும் செய்வதில்லை. இதற்கு ஒரு எளிமையான சூட்சமம் இருக்கிறது.
இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு சிறிய மண் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு மண்பாத்திரம் தான் வேண்டும். வேறு எந்த பாத்திரத்தையும் உபயோகப்படுத்தக்கூடாது. வீட்டில் பெரிய அகல் விளக்கு இருந்தால் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சரிசியை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒருநாள் முழுவதும் இது அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் இதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். இதை அப்படியே எடுத்து எறும்புகள் பறவைகளுக்கு தானமாக தந்து விடுங்கள். இயன்றவர்கள் தினமும் கூட இதை செய்யலாம். இயலாதவர்கள் இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் ஒருமுறை மட்டுமாவது செய்து பாருங்கள். மண் பாத்திரத்தில் வைத்த பச்சரிசியை எறும்புகளும் குருவிகளும் வந்து சாப்பிடும் பொழுது அதனால் நம்முடைய கர்ம வினைகள் தீரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:சகல பிரச்சனைகளை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
நமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கடன் பிரச்சினையாக இருந்தாலும், நோய் நொடிகளாக இருந்தாலும், குடும்ப ரீதியான பிரச்சினைகளாக இருந்தாலும் அனைத்திற்கும் காரணம் நம்முடைய கர்ம வினைகள் தான். அந்த கர்ம வினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறையை முழு மனதோடு பின்பற்றுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய கர்மவினைகள் தீருவதோடு, கஷ்டங்களும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.