ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கருட பஞ்சமி வருகிறது. அன்றைய தினம் கருடாழ்வாரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி கருடாழ்வாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இருக்கக்கூடிய பய உணர்வு முற்றிலும் நீங்கி தைரியமான நபராக நம்மால் வாழ முடியும். அதே சமயம் எதிர்பாராத விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கவும் கருடாழ்வார் நமக்கு துணை புரிவார். அப்படிப்பட்ட கருட பஞ்சமியை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கருட பஞ்சமி வழிபாடு
கருட பஞ்சமி அன்று காலை 9:00 மணியிலிருந்து 10:20 மணிக்குள்ளோ அல்லது 12;05 மணியிலிருந்து 1:05 மணிக்குள்ளோ நாம் வழிபாடு செய்யலாம். அப்படி கருடாழ்வாரை வழிபாடு செய்ய இயலாதவர்கள் கௌரியை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த கருட பஞ்சமி அன்று கௌரியை நாம் வழிபாடு செய்யும்பொழுது பல நன்மைகள் நமக்கு ஏற்படும். எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கும்.
வீட்டிலேயே இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கருடாழ்வாருக்கு துளசி மாலை சாற்றி கொழுக்கட்டையை படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தர வேண்டும். வீட்டில் வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் கருடரின் படம் இருந்தால் அந்த படத்தை வைத்து வழிபாடு செய்யலாம் அல்லது பெருமாளின் படத்துடன் கருடாழ்வார் இருந்தாலும் பெருமாள் படம் மட்டும் இருந்தாலும் வழிபாடு செய்யலாம். அப்படி இல்லாத பட்சத்தில் கௌரியின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.
படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பெருமாள் படத்தை வைத்து வழிபாடு செய்வதாக இருந்தால் துளசி மாலை சாற்ற வேண்டும். அம்மனின் படத்தை வைத்து வழிபாடு செய்வதாக இருந்தால் செவ்வரளி மலர்களை மாலையாக சாற்ற வேண்டும். அடுத்ததாக ஒரு சிவப்பு நிற கயிறை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த அம்மனின் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே அந்த சிவப்பு நிற கயிற்றில் ஒரே இடைவெளியில் 10 முடிச்சுகள் போட வேண்டும்.
பெருமாளின் படத்தை வைத்து வழிபாடு செய்பவர்களாக இருந்தால் பெருமாளின் மந்திரத்தை கூறிக்கொண்டு இந்த முடிச்சை போட வேண்டும். இந்த கயிற்றை சுவாமி படத்திற்கு வலது புறமாக வைத்து விட வேண்டும். அதேபோல் வீட்டில் வாகனங்கள் இருக்கும் பட்சத்தில் அந்த வாகனங்களின் சாவியையும் இந்த சிவப்பு கயிற்றுடன் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக கொலுக்கட்டையை படைத்து வைத்து மனதார வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்து முடித்துவிட்டு வாகன சாவியை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்து விடுங்கள். அந்த கயிற்றை எடுத்து யாருக்கு பய உணர்வு வீட்டில் இருக்கிறதோ அவர்களுடைய கையில் ரக்ஷையாக கட்டி விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் பய உணர்வு முற்றிலும் நீங்கும். திடீர் விபத்துகளோ அல்லது கோர விபத்துகளோ ஏற்படாமல் தடுக்கப்படும். இதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும்.
இதையும் படிக்கலாமே:நாக சதுர்த்தி வழிபாடு
கருட பஞ்சமி தினத்தன்று இந்த முறையில் வழிபாடு செய்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தையும் நீக்கி தைரியத்துடன் செயலாற்றி வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.