காலம் காலமாக இந்துக்களின் கலாச்சாரங்களில் ஒன்றாக இணைந்து வரும் இந்த காப்பு கட்டும் பழக்கம் இன்றளவும் நம்மிடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மணிக்கட்டு, கால் மற்றும் இடுப்பில் காப்பு கயிறு அணிவதால் திருஷ்டிகள் கழியும் என்பது அனைவரும் அறிந்ததே! மேலும் அதில் இருக்கும் பலன்கள் என்னென்ன? என்னும் தொகுப்பினை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
மணிக்கட்டு கால் பகுதி மற்றும் இடுப்பு பகுதிகளில் திருஷ்டிக்கு அரைஞான் கயிறு அல்லது கருப்பு கயிறு காப்பாக கட்டுவது வழக்கம். பிறந்த குழந்தைக்கு கூட இதை கட்டுவார்கள். பிறந்தது முதல் சாகும் வரை ஒரு மனிதன் உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் கருப்பு கயிறு அணிந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. கருப்பு கயிறு கட்டுவதால் காத்து, கருப்பு அண்டாது என்று சொல்லி நம் முன்னோர்கள் கட்டி விடுவார்கள்.
காத்து, கருப்பு அண்டாமல் இருக்க மட்டும் காப்பு கயிறு கட்டப்படுவது கிடையாது. யாருடைய கண் திருஷ்டியும் நம்மை பாதிக்காமல் இருக்கவும் கருப்பு கயிறு கட்டப்படுகிறது. கருப்பு தீய சக்திகளை எளிதில் ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. மந்திரித்து கட்டப்படும் கயிற்றுக்கு அவ்வளவு சக்திகள் உண்டு. பிறந்த குழந்தைக்கு அருகம்புல் அல்லது தர்ப்பை புல்லினால் தாயத்து செய்து மந்திரித்து கட்டுவார்கள். இறைவனை வேண்டி பிரார்த்தித்து மந்திரித்து கட்டப்படும் இக்கயிறு குழந்தைக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று நம்பப்பட்டது. கண் திருஷ்டிகள் குழந்தைகளை தீண்டாது பாதுகாக்கும். தீய சக்திகள் நெருங்காமல் இருக்கும். புதிதாக பிரபஞ்சத்தில் அடி எடுத்து வைத்த சிசுக்களுக்கு கடவுளின் அருளும் கிடைக்கும்.
அன்றைய நாள் முதல் இறக்கும் தருவாயில் இருக்கும் கடைசி நிலையிலும் இடுப்பில், கையில் கருப்பு கயிறை கட்டுவது உண்டு. ஆண், பெண், குழந்தைகள் என்று எல்லாரும் கருப்பு கயிறு அணிவது நல்லது. பட்டு நூலினால் அணியப்படும் காப்பிற்கு இன்னும் சக்திகள் அதிகம். கருப்பு கயிறு மந்திரங்களின் அதிர்வலைகளை ஈர்க்கக்கூடிய வல்லமை பெற்றுள்ளது. கருப்பு கயிறு அணிந்து கொண்டு நாம் மந்திர உச்சாடனம் செய்து இறைவனை வணங்கும் பொழுது அது நேரடியாக சென்றடையும் என்பது நம்பிக்கை.
மணிக்கட்டில் கட்டுவதால் அவ்விடத்தில் நாடி சீராக இயங்குகிறது. இதனால் மனம் அலைபாயுவது தடுக்கப்படுகிறது. எண்ணங்கள் ஒழுங்காகிறது. மனிதன் சரியான சிந்தனையுடன், சரியான முடிவுகள் எடுக்க உதவுகிறது. தவறான வழியில் திசை மாறி செல்வதை இக்காப்பு தடுத்து நல்வழிப்படுத்துகிறது. மனநிலையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தாமல் வேலி போல் செயல்படும், இந்த அற்புத காப்பிற்கு சரியான மந்திரங்கள் ஜெபித்து கொடுத்தால் அதை கட்டுபவரின் வாழ்க்கையில் நன்மைகள் பல செய்யும்.
இதையும் படிக்கலாமே:
வீட்டில் வறுமை நீங்க பரிகாரம்
சிவப்பு நிற கயிறு கட்டுவதால் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். துர்ஷக்திகள் நம்மை நெருங்காது. நம்மை தொடரும் கண்டங்களில் இருந்து பாதுகாத்து நீண்ட ஆயுளை கொடுக்கும். அது போல ஆரஞ்சு நிற வண்ணத்தில் காப்பு கயிறு அணிவதால் தைரியம் பிறக்கும். புகழும், அதிகாரமும் ஓங்கி இருக்கும். பச்சை நிற கயிறு கட்டுவதால் வம்சம் தழைத்தோங்கும். காலில் கருப்பு கயிறு அணிவதால் ஏவல்கள் எதுவும் நம்மை தீண்டாது. சனி பாதிப்புகள் குறையும். பாதம் வழியாகத்தான் சனி நம்மை பீடிக்கிறது. பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கட்டிக் கொள்ள வேண்டும்.