காசியில் கருடபகவான் பறப்பது இல்லை! பல்லி சத்தம் போடுவதும் இல்லை! இதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

kasi-nagar

காசி மாநகரத்தையே, காவல் தெய்வமாக நின்று பாதுகாக்கும் பொறுப்பு காலபைரவருக்கு உள்ளது. பழமைவாய்ந்த சிவன் கோவில்களையும் பாதுகாப்பது காலபைரவர் தான். சிவபெருமானுக்கு எத்தனை மகத்துவமான சக்தி உள்ளதோ, அதே அளவுக்கு ஈடு இணையான ஆற்றலை பெற்றவர்தான் காலபைரவர். சொல்லப்போனால் சிவனின் அம்சம் தான் இந்த காலபைரவர். காலபைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காசி மாநகரில் கருடன் பறப்பதில்லை! அங்கு பல்லிகள் இருந்தாலும் அது சத்தம் எழுப்பாது? இந்த இரண்டு அதிசய நிகழ்வுக்கும் காரணம் யார் தெரியுமா? காலபைரவர் தான். நல்ல சகுனத்தை சொல்லும் கருடனுக்கும் பல்லிக்கும் எதற்காக இந்த சாபம் வழங்கப்பட்டது என்ற வரலாற்று கதையை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டுமா? இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

Raman

ராமபிரானுக்கும், இராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராமனின் கையால் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதனால் ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பிரம்மஹத்தி தோஷத்தோடு, பட்டாபிஷேகம் நடத்தி கொள்ளக் கூடாது என்பது சாஸ்திரம். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க வேண்டும் என்றால், காசியிலிருந்து சுயம்புலிங்கத்தை கொண்டுவந்து, ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டும் என்பது நியதி.

இப்போது ராமன் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமென்றால் காசியிலிருந்து சுயம்புலிங்கம், ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். என்ன செய்வது? ராமதூதன் ஹனுமன் தான், ராமனுக்கு உதவி செய்ய வேண்டும். ‘ராமன் ஹனுமனை பார்த்து, காசியிலிருந்து சுயம்புலிங்கத்தை எடுத்து வரச்சொல்லி ஆணையிட்டார். ராமதூதன் ஹனுமன், ராமனின் கட்டளையை ஏற்று காசிக்கு புறப்பட்டார்.

kalabairavar

ராமேஸ்வரத்தில் நடந்துகொண்டிருக்கும் இந்த சம்பவத்தை, ஆந்திர மாநிலம் சித்தூரில், ராமகிரி என்னும் தலத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ‘காளிதேவிசமேதர் காலபைரவர்’ தன்னுடைய ஞானக் கண்ணினால் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த ஊரானது இராமாயண காலத்தில் திருக்காரிகை என்ற பெயரில் இருந்து வந்தது. ஹனுமன் காசியிலிருந்து எடுத்துவர கூடிய அந்த முதல் சுயம்பு லிங்கம், தன்னுடைய ஆட்சியில் இருக்கும் திருகாரிகை என்ற ஊரில், தான் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் காலபைரவர். இதற்கான திட்டங்களையும் உடனே தீர்த்த தொடங்கினார்.

- Advertisement -

காலபைரவர் தீட்டிய சூழ்ச்சித் திட்டங்கள்!
முதலில் சூரிய பகவானிடம் சென்றார் காலபைரவர். ஹனுமன் காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் முழு வேகத்துடன் வீசி நன்கு பிரகாசமாக ஒளிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

hanuman-sivan

இரண்டாவதாக கங்கா தேவியிடம் சென்றார் காலபைரவர். ஹனுமன் காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வரும்போது தாங்கள் மறைந்து இருக்க வேண்டும் என்றவாறு வேண்டி கேட்டுக் கொண்டார்.

மூன்றாவதாக வாயுதேவனிடம் சென்றார் காலபைரவர். ஹனுமன் காசியிலிருந்து எடுத்து வரும்போது வேகமான சூறாவளி காற்றை வீச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறுதியாக திருக்காரிகை மக்களின் கனவில் வந்த காலபைரவர், நாளை ஒரு நாள் சூரியன் அஸ்தமிக்கும் வரை யாரும் வெளியில் வர வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார். ஆக மேற்குறிப்பிட்ட அனைவரும் காலபைரவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் காலபைரவரின் சூழ்ச்சி எதுவுமே பாவம் ஹனுமனுக்கு தெரியாது. ஹனுமன் காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வரும்போது, திருகாரிகையை, வான் மார்க்கமாக கடக்கும்போது, சூரியனின் கதிர் வீச்சு அதிகமாக இருந்தது. வாயு தேவன் தன்னுடைய காற்றை வேகமாக வீச தொடங்கினார். ஹனுமனுக்கு தொண்டை வறண்டு தண்ணீர் தாகம் எடுத்தது தண்ணீரைத் தேடினார். கங்காதேவியும் காலபைரவர் மறைந்திருக்கும் படி சொல்லி விட்டாரே! ஹனுமனுக்கு தண்ணீரும் கிடைக்கவில்லை.

தன்னுடைய தாகத்தை தணித்துக்கொள்ள ஹனுமன், திருகாரிகை என்னும் இடத்தில் தரையிறங்கினார். காலபைரவரின் சூழ்ச்சியே இதுதானே! தரையிறங்கிய ஹனுமனின் கவனத்தை திசை திருப்ப, காலபைரவர் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாக தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டார். சிறுவனை பார்த்த ஹனுமன், ‘எனக்கு மிகவும் தாகமாக உள்ளது. இந்த இடத்தில் பருகுவதற்கு நீர் எங்கேயாவது கிடைக்குமா?’ என்று கேட்டார்.

hanuman-lingam1

சிறுவன் ரூபத்தில் இருந்த கால பைரவர் அச்சமயம் கங்காதேவியை வெளிபடுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது அந்த இடத்தில் கங்காதேவி, அருணா நதியாக ஊற்றெடுக்க தொடங்கினாள். தண்ணீரை கண்ட ஹனுமன் தன் கையில் உள்ள லிங்கத்தை சிறுவனிடம் சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்தார். ஆனால் அச்சிறுவனோ ‘என்னால் இந்த பாரத்தை நீண்ட நேரம் தாங்க முடியாது என்றபடி அனுமனிடம் கூறினான்’. உன்னுடைய பாரத்தை நான் குறைக்க வழி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஹனுமன் தண்ணீரைப் பருக சென்றுவிட்டார்.

சிறுவன் ரூபத்தில் இருந்த கால பைரவரோ தன்னுடைய கையில் வைத்திருந்த சிவலிங்கத்தை, நல்ல முகூர்த்த நேரத்தில் அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து விட்டு, ‘என்னால் பாரம்தாங்க முடியவில்லை அதனால் தான் கீழே வைத்து விட்டேன்’ என்ற சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து ஓடி விட்டான். ஹனுமன் தான் பலசாலி ஆயிற்றே? இந்த லிங்கத்தை சுலபமாக தன்னால் எடுத்துவிட முடியும் என்ற கர்வத்தோடு லிங்கத்தை தன் வாயாலேயே சுருட்டி தூக்கிவிட முயற்சித்தார். ஆனால் சிவலிங்கம் அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை. கர்வத்தோடு ஆணவத்தோடு செய்யும் காரியம் எதுவுமே பலிக்காது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

hanuman-lingam

தான் செய்த தவறை உணர்ந்த ஹனுமன், லிங்கத்திடம் மன்னிப்பு கேட்டு பூமியில் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை, ராமேஸ்வரத்திற்கு எடுத்து செல்லவேண்டும் என்ற படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால் சிவபெருமானோ நல்ல நேரத்தில் நான் இந்த இடத்தில் பிரதிஷ்டை ஆகி விட்டேன். உனக்கு தேவைப்பட்டால் திரும்பவும் காசிக்குச் சென்று இன்னொரு சுயம்புலிங்கத்தை எடுத்துக்கொள். என்றபடி ஆணையிட்டு விட்டார். என்ன செய்வது? ஹனுமன் திரும்பவும் காசிக்கு சென்றார்.

என்ன ஆச்சரியம்? காசிக்கு திரும்பும்போது இயற்கை சூழல் அனைத்தும் சரியான முறையில் இயங்கியது. ஹனுமன் கண்டுபிடித்துவிட்டார். இவையெல்லாமே காலபைரவரின் சூழ்ச்சியினால் தான் நடந்துள்ளது என்பதை! காசிக்கு சென்றால் கங்கா நதியில் வினோதமான ஆச்சரியம் ஒன்று நிகழ்ந்தது. காசி நதிக்கரையில் ஒன்றுக்கு மேற்பட்ட பல லிங்கங்கள் இருந்தன. அதில் சுயம்புலிங்கம் எது என்று, பாவம் ஹனுமனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

karudan-palli

அந்த சமயம் பார்த்து, கருடனும் பல்லியும் ஹனுமனுக்கு உதவி செய்தனர். கருடன் ஒரு குறிப்பிட்ட லிங்கத்தின் மேல் சுற்றினார். அந்த சமயம் பல்லி சத்தம் போட்டது. இந்த சகுனத்தை கண்ட ஹனுமன் அந்த குறிப்பிட்ட லிங்கம் தான் சுயம்புலிங்கம் என்று கண்டுபிடித்து விட்டார். மறுபடியும் அந்த லிங்கத்தை எடுக்க முயன்றார்.

ஆனால் பைரவரோ லிங்கத்தை எடுக்க விடவில்லை. காசி மாநகரை பாதுகாக்கும் என்னிடம் அனுமதி கேட்காமல் எப்படி லிங்கத்தை எடுக்கலாம்? என்று சொல்லி பைரவருக்கும், அனுமனுக்கும் போர் நிகழ்ந்தது. தன்னால் எவரையும் ஜெயித்து விட முடியும் என்ற ஆணவம் ஹனுமனுக்கு இருந்ததால், இந்த யுத்தத்தில் தோல்வியடைந்தார்.

kasi

இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முனிவர்கள், பைரவரிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். ராமேஸ்வரத்தில், ராமபிரான் பூஜை செய்வதற்காக, இந்த லிங்கத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்! ஆகவே அந்த அவசரத்தில் தான் ஹனுமன், காசியின் காவல் தெய்வமான தங்களிடம் அனுமதி கேட்காமல் லிங்கத்தை எடுத்து விட்டார். தாங்கள் காசியிலிருந்து லிங்கத்தை எடுத்துச் செல்ல அனுமதி தரவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மனம் குளிர்ந்த காலபைரவர், ஹனுமன் லிங்கத்தை எடுத்துச் செல்ல அனுமதித்தார்.

காசி மாநகரை பாதுகாக்கும் பைரவர் ‘என் அனுமதி இன்றி அனுமனுக்கு எப்படி சகுணம் சொல்லலாம்’? என்ற கோபத்தில், இனி இந்த காசி மாநகரத்தின் மேல் கருடன் பறக்கக் கூடாது என்றும், பல்லி சத்தம் போடக் கூடாது என்றும் சாபம் பிறப்பித்து விட்டார்.

bairavar

காசி மாநகரத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும் காலபைரவர் இடம் ஹனுமன் சிவலிங்கத்தை எடுப்பதற்கு முன்பாக அனுமதி கேட்டு இருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. யாராக இருந்தாலும் சரி. எந்த இடத்தில் இருந்தாலும் சரி. அவர் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அந்தந்த இடத்தில் கொடுத்தே ஆகவேண்டும். தலைகனம் என்பது யாருக்கும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தோல்வியைத் தழுவுவார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த கதை!

இதையும் படிக்கலாமே
இந்த வருடம் அட்சய திதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது! கட்டாயம் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு இதை செய்யுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kashi vishwanath temple miracles. Miracles of kashi vishwanath. Kasi temple special. Kasi kovil varalaru Tamil. Kashi history.